எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு மரண தண்டனை; வெலிக்கடை சிறைக் கைதிகள் கொலை வழக்கின் தீர்ப்பு வெளியானது

2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவவை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று (புதன்கிழமை) தீர்ப்பை அறிவித்துள்ளது.

கடந்த 2012 நவம்பர் மாதம் 9 ஆம் திகதியன்று STF அதிகாரிகள் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைந்து, கைதிகள் வசம் இருந்த சட்டவிரோத மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கைப்பற்றும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது, ​​கைதிகளினால் சிறைச்சாலையின் ஆயுதக் கிடங்கு உடைக்கப்பட்டு சிறைச்சாலையிலுள்ள துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதையடுத்து, மோதல் ஏற்பட்டதாகவும், மோதலை அடக்குவதற்காக இராணுவத்தின் மூன்று படைப்பிரிவுகள் சிறைக்குள் அனுப்பப்பட்டதாகவும் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் போது, இந்த வழக்கின் பிரதிவாதிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 கைதிகள் சிறைச்சாலையின் தொழிற்பேட்டை என அழைக்கப்படும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டமை, அதற்கு சதி செய்தமை மற்றும் சட்டவிரோதமாக மக்கள் கூட்டமாக இணைந்து செயற்பட்டமை உள்ளிட்ட 33 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதன்படி குறித்த வழக்கு கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இரண்டு வருடங்களுக்கு மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

வழக்கு விசாரணையின் முடிவில் கடந்த 06ஆம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்தது, ஆனால் தீர்ப்பை தயார்படுத்த முடியாத காரணத்தினால் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், மோதலின் போது எட்டு கைதிகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் முன்னாள் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவவை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதியான எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.