இனம் மதம் வேறுபாடின்றி ஒற்றுமையுள்ள ஒரு சபையாக முன்னெடுத்துச் செல்வேன்

( வாஸ் கூஞ்ஞ) 

மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக ஏகமனதாக புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நான் இவ் சபையில் இனம் மதம் வேறுபாடின்றி ஒற்றுமையுள்ள ஒரு சபையாக முன்னெடுத்துச் செல்வேன் என மன்னார் பிரதேச சபை தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எம்.ஐ.எம். இஸதீன் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் பிரதேச சபை தற்பொழுது  இவ் சபையின் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி வசம் திரும்பியுள்ளது. மன்னார் பிரதேச சபை உப தலைவராக இருந்த ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை சார்ந்த எருக்கலம்பிட்டி உறுப்பினர் எம்.ஐ.எம். இஸதீன் மன்னார் பிரதேச சபை தவிசாளராக தெரிவு செய்யப்பட்டபின் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்

மன்னார் பிரதேச சபையின் புதிய தெரிவு புதன்கிழமை இன்று (12.01.2022) நடைபெற்றது. இதில் நான் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.

இவ் தெரிவானது எவ்வித எதிர்ப்பும் இல்லாது ஏகமனதான முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது.

ஆகவே நான் இவ் பிரதேச சபையில் இருக்கும் ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றியுள்ளவனாக இருக்கின்றேன்.

நான் இவ் சபையில் ஒரு ஒற்றுமையான ஆட்சியை முன்னெடுத்து செல்ல இருக்கின்றேன்.

இவ் சபையில் எதிர்காலத்தில் எவ்விதமான பிரச்சனைகளும் தோன்றாத தன்மையில் கொண்டு செல்வதற்கு என்னாலான முயற்சிகள் முன்னெடுத்துச் செல்ல நான் முயற்சிப்பேன்.

எனது ஏகமனதான இந்த தெரிவில் தமிழரசுக் கட்சியும் எனக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளமையால்   இந்த பிரதேச சபைக்குள் எதிர்காலத்தில் மத வாதம் இன வாதம் தோன்றாத வண்ணம் கட்டிக்காக்கப்படும் என இவ்வாறு தெரிவித்தார்.