இலங்கையுடனான இந்தியாவின் உறவு தமிழர்களின் உரிமை மீட்க அல்ல, வளங்களை சுரண்டவே என்பதை வரலாறுகள் தெளிவாக முன்வைத்துள்ளது

(நூருல் ஹுதா உமர்)

பலஸ்தீன் இஸ்ரேல் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர செய்யப்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கையில் அமெரிக்கா ஒரு பார்வையாளராவே இருந்தது. அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது போராட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர்களே. ஆனால் இலங்கையில் தங்களுக்கு அதிகாரம் வேண்டுமென்று போராடிய தரப்பினரை தவிர்த்து, இந்த ஆயுதப்போராட்டத்தில் ஒரு உயிரையும் இழக்காத இந்தியா பார்வையாளராக இருக்கவேண்டிய சந்தர்ப்பத்தை தவிர்த்து, இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தம் செய்ய முனைந்தது எதற்காக ? என சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்க பேரவையின் தலைவர் எம்.எச்.எம். இப்ராஹிம் அறிக்கையொன்றினூடாக கேள்வியெழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, உண்மையில் அன்றய காலப்பகுதியில் பிரச்சினைகள் இருந்தது இந்தியாவுக்கும் இலங்கைக்கும்தான். 1977ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றி ஜே.ஆர் அரசாங்கம் திறந்த பொருளாதார கொள்கையை கடைப்பிடிக்க நினைத்து அமெரிக்கா சார்வு நாடுகளுடன் இணங்கி செல்ல முற்பட்டபோது, இதனை விரும்பாத இந்தியா அதனை தடுப்பதற்கு ராஜதந்திர முறையில் கடும் முயற்சிகளை எடுத்தது. அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததன் காரணமாகவே, அமெரிக்கா சார்பாக செயல்பட நினைக்கும் இலங்கை அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளி அதன் மூலம் தங்களுடைய காரியத்தை சாதித்துகொள்ளவே இந்தியா விரும்பியிருந்தது. அதற்கு பயன்படுத்தபட்டவர்களே தமிழ் ஆயுத குழுக்கலாகும். உண்மையில் தமிழ் மக்களின் மீதுகொண்ட பாசத்தின் காரணமாக தமிழர்களுக்கு உதவிசெய்ய இந்தியா நினைக்கவில்லை, மாறாக இலங்கை அரசாங்கத்தை தன்பிடிக்குள் வைத்துக்கொள்ளவே தமிழ் ஆயுதக் குழுக்களை பயன்படுத்த நினைத்தது என்பதே உண்மையாகும்.

இந்த கொள்கையில் உறுதியாக இருந்த இந்திரா காந்தி அவர்களின் மரணத்துக்கு பின் பிரதமராக பதவியேற்றுக்கொண்ட ரஜீப் காந்தியின் அரசியல் அனுபவத்தின் இயலாமையை பயன்படுத்த நினைத்த ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்கள் 1986 காலப்பகுதியில் லலித் அத்துலத் முதலி அவர்களுக்கு அதிகாரம் பொருந்திய “பந்தோபஸ்த்து”அமைச்சை வழங்கி தமிழ் ஆயுததாரிகளை தேடித்தேடி அழிக்கும் யுத்தத்தை ஆரம்பிக்குமாறு பணித்திருந்தார். இந்த யுத்தத்தின் தாக்கம் காரணமாக தமிழ் ஆயுதபோராட்டம் மௌனிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதை அவதானித்த இந்திய உலவு பிரிவான “றோ” உடனடியாக அன்றய பிரதமர் ராஜீவ் காந்திக்கு இதன் நோக்கத்தையும், இதன் பின்விளைவுகளையும் எத்திவைத்தனர்.

இலங்கையில் தமிழர்களின் ஆயுதபோராட்டம் மௌனிக்குமாக இருந்தால் அமெரிக்காவின் தளமாக இலங்கை மாறிவிடலாம் என்றும், அதன் மூலம் பாதிக்கப்படபோவது இந்தியாவின் பாதுகாப்பு தண்மைதான் என்றும், இந்தியாவை சூழ இருக்கும் நாடுகளில் இலங்கை மட்டுமே நமக்கு பாதுகாப்பாக இருந்தது இப்போது அந்தநாடும் அமெரிக்கா பக்கம் சார்ந்து செல்வதன் மூலம் இலங்கையின் முக்கிய இயற்கை துறைமுகமான திருக்கோணமலை துறைமுகம் அமெரிக்காவின் கைக்கு செல்லலாம். அப்படி சென்றால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறலாம், இதனை தடுக்கவே உங்களது அம்மா இந்திரா காந்தியவர்கள் இலங்கையில் தமிழ் ஆயுத குழுக்களை உருவாக்கி இலங்கை அரசாங்கத்தை அச்சுறுத்தி வந்தார். இப்போது அந்த ஆயுதக் குழுக்கள் தோல்வியடையும் நிலையில் இருப்பதனால் ஏதாவது ஒரு நடவடிக்கையின் மூலம் இலங்கை அரசாங்கம் நடத்தும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும். அப்போதுதான் அவர்களின் மூலம் நமது திட்டத்தை நிறைவேற்றலாம் என்று ஆலோசனை வழங்கியது.

இந்த விடயத்தின் பாரதூரத்தை உணர்ந்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை அரசாங்கத்துக்கு நேரடி எச்சரிக்கை விடுக்கும் முகமாக வடக்கிலே உள்ள மக்களுக்கு மனிதாபிமான முறையில் உணவு வழங்கப் போகின்றோம் என்ற போர்வையில் மிராஜ் யுத்தவிமானங்களை இலங்கையின் வான்பரப்புக்குள் அனுப்பியதன் மூலம் நாங்கள் யுத்தம் செய்யவும் தயார் என்று இலங்கை அரசாங்கத்துக்கு மறைமுகமாக எத்திவைத்தது மட்டுமல்ல 1974ம் ஆண்டு வங்களாதேசத்தில் என்ன நடந்தது என்பதையும் நாசுக்காக சொல்லி நின்றது. இதனை எதிர்க்க அமெரிக்கா சீனா போன்ற நாடுகளிடம் இலங்கை அரசாங்கம் உதவிகேட்டபோது, இதற்கு நாங்கள் உதவி செய்தால் மூன்றாம் உலகபோராகவும் இது வெடிக்கலாம் என்ற காரணத்தைகாட்டி அந்த நாடுகள் இலங்கைக்கு நேரடியாக உதவ மறுத்துவிட்டன. இதன் பாரதூரத்தை உணர்ந்து கொண்ட ஜே.ஆர் அரசாங்கம் இந்தியாவிடம் சரணடைவதை தவிர வேறு வழியில்லையென்ற நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலைக்காகவே காத்திருந்த இந்தியா அதற்கு சம்மதம் தெரிவித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இந்த பேச்சுவார்த்தைகள் எதிலுமே தமிழ் ஆயுத குழுக்களோ அல்லது தமிழ் அரசியல்வாதிகளோ கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை. இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம் இந்தியாவின் நோக்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக அல்லவென்பது. அவர்களுடைய நோக்கமெல்லாம் பாதுகாப்பு சம்பந்தமாக இந்தியாவை மீறி இலங்கை எந்தவிடயத்தையும் செய்யக்கூடாது என்பதுதான். அந்த விடயத்தை இலங்கை இந்தியாவிடம் விட்டுக்கொடுத்ததன் காரணமாகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் ஜே.ஆரும் ரஜீப் காந்தியும் கையொப்பமிட்டார்கள். உண்மையில் தமிழர்களுடைய பிரச்சினைக்காத்தான் இந்தியா பாடுபட்டது என்றிருந்தால் அந்த ஒப்பந்தத்தில் தமிழ் தரப்பும் இலங்கை அரசாங்கமுமே கையொப்பம் இட்டிருக்கவேண்டிய அதேநேரத்தில் அதன் பார்வையாளராக இந்தியா இருந்திருக்கவேண்டும் என்பதுதான் உண்மையாகும். ஆனால் நடந்ததோ வேறு.

இந்தியாவின் திட்டத்துக்கு அடிபணிந்த இலங்கைக்கு உதவி செய்யவே 13 வது திருத்தத்தினூடாக மாகாணசபை யென்ற தீர்வை பெற்றுக்கொடுத்தது இந்தியா. அதேநேரம் தங்களால் வளர்க்கப்பட்ட ஆயுதக் குழுக்களை அடக்கி அவர்களை நிராயுதபாணிகளாக மாற்றவேண்டிய பொறுப்பும் இந்தியாவையே சார்ந்தது என்றும் அந்த நடவடிக்கைகளில் இலங்கை மூக்கை நூழைக்காதென்றும் தன்னுடைய நரித் தந்திரத்தை பயன்படுத்தினார் ஜே.ஆர். அந்த நரித் தந்திரத்தின் விளைவுகள் இன்றும் தொடர்கின்றது என்பதை நாமறிவோம். இப்போது விடயத்துக்கு வருவோம். இந்தியாவை இன்றும் நம்பி ஏமாறும் தரப்பினர் இந்தியாவின் கொள்கையென்ன என்பதை அறியாமல் இருப்பதுதான் ஆச்சரியமானது. இந்தியா ஒருகாலும் தமிழர்களுக்காக இலங்கையை பகைத்துகொள்ளாது. அப்படி பகைத்துகொள்வதாக இருந்தால் தங்களுடைய நலனுக்கு ஏதாவது பாதகம் வருகின்ற போதுதான் அது நடக்கும். இன்றய உலக அரசியல் சூழ்நிலையில் அது சாத்தியபடாத ஒன்றாகவே இருக்கின்றது. இந்த உண்மைகளை தமிழ் தரப்பினர் அறிந்திருப்பார்களேயானால். இந்தியாவிடம் உதவிகேட்டு நிற்கமாட்டார்கள். சரியோ பிழையோ இலங்கை அரசாங்கத்துடன் இணங்கிசென்றே தீர்வுகளை பெறமுடியும். தமிழ் ஆயுததாரிகள் பலமான நிலையில் இருந்தபோது உலக நாடுகளின் உதவியோடு இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பலவழிகள் திறந்து விடப்பட்டன.

பிரபாகரனின் தனி ஈழமே ஒரே தீர்வு என்று அடம்பிடித்ததனால் அந்த சந்தர்ப்பங்கள் அனைத்துமே “டாட்டா” காட்டிவிட்டு சென்றுவிட்டன என்ற உண்மையை யாரும் மறுத்துவிட முடியாது. இப்போதும் அதே தவறைத்தான் தமிழ் அரசியல்வாதிகளும் செய்துவருகின்றார்கள். சரியோ பிழையோ பிரபாகரன் தனிஈழம் என்று போராடியது தமிழ் மக்களுக்காக ஆனால் இந்தியா போராடியது தனது நலனை காப்பாற்றிகொள்ள அதேபோன்று இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் போராடுவது தங்களுடைய வாக்குவங்கிகளை காப்பாற்றி கொள்ள என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ளாதவரை தீர்வு என்பது கானல் நீர்தான் என்று தெரிவித்துள்ளார்.