எமது உரிமைகளை வென்றெடுக்க ஒன்றுபட்ட சக்தியாகச் செயற்பட தமிழர் திருநாளில் உறுதிபூண வேண்டும்

(சுமன்)

ஒரு கூட்டுக்குள் ஒன்றுபட்ட சக்தியாகவும், மிகவும் ஒழுக்கமுள்ள சமூகமாகவும் கட்டி வளர்க்கப்பட்ட எமது சமூகம் இன்று பல குழுக்களாகப் பிரிந்து பிரிவினைகளுக்கு இடம்கொடுத்து தம்மைத் தாமே அழித்துக் கொள்கின்ற சூழலில் இருக்கின்றது. இந்நிலையை மாற்றி அமைத்து எமது இனத்தின் கலாச்சாரம், சமூக பொருளாதாரம் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு, எமது உரிமைகளை வென்றெடுக்க ஒன்றுபட்ட சக்தியாகச் செயற்பட வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

தைத்திருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

காலத்தின் சுழற்சியில் உதயமாகும் தமிழர் திருநாளாம் தைத்திருநாளிலே உலகத் தமிழர் அனைவருக்கும் எம் கட்சியின் சார்பில் தைப்பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது சமூகம் ஒரு கூட்டுக்குள் ஒன்றுபட்ட சக்தியாக, மிகவும் ஒழுக்கமுள்ள சமூகமாகக் கட்டி வளர்க்கப்பட்டது. ஆனால், இன்று நம் சமூகம், சமூக ரீதியாகவும், தாயக ரீதியாகவும் பல குழுக்களாகப் பிரிந்து பிரிவினைகளுக்கு இடம்கொடுத்து தம்மைத் தாமே அழித்துக் கொள்கின்ற ஒரு சூழலில் இருக்கின்றது. எனவே எமது சமூகம் எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளிலும், எமது உரிமை சார்ந்த விடயங்களிலும் உலக மயமாக்கல் திட்டத்துடன் இணைந்து செயற்படக் கூடிய அளவிற்கு வளர்ச்சி பெற வேண்டும் என இந்நாளிலே நாங்கள் வாழ்த்துகளைக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

எதிர்காலத்தில எமது இளைஞர் சமுதாயம் எந்தளவிற்குக் கட்டி வளர்க்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றோம். ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னர் ஒரு தசாப்தம் நிறைவடைந்து விட்டது. இந்தப் பத்து ஆண்டுகளுக்குள் எமது இளைஞர் சமூகம் மற்று வழிகளில் திசை திருப்பப்பட்டு, மோதல்களில் ஈடுபடுவதும், சமூக விழுமியங்களைப் பாதுகாக்காது அதனைச் சீரழிப்பதுமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை அரசாங்கத்தின் ஊதுகுழல்களாகச் செற்படும் சில சக்திகளும், இலங்கை இராணுவத்தின் புலனாய்வுத் துறையின் பின்னணியுடன் செயற்படும் சக்திகளும் எமது இளைஞர் சமூதாயத்தைத் தப்பான வழிகளில் கொண்டு சென்று தமது அரசியல் நோக்கத்தினை அடைவதற்காக முன்நின்று செயற்படுகின்றனர். இந்த நிலைமையை நாங்கள் நிச்சயம் மாற்றி அமைக்க வேண்டும். எமது தமிழினத்தின் கலாச்சாரம், சமூக பொருளாதாரம் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு, சிறந்ததொரு சமூகமாக நாங்கள் கிளர்ந்தெழுந்து எமது உரிமைகளை வென்றெடுக்க ஒன்றுபட்ட சக்தியாகச் செயற்பட இளைஞர் சமுதாயம் முன்வர வேண்டும்.

எமது மக்கள் பல வலிகளைச் சுமந்தவர்களாகவே வாழ்;ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த பலவீனமான ஒரு நிலை எமது இனத்தை மீண்டும் மீண்டும் சிதைத்து தேசியக் கோட்பாட்டை அழித்து ஒட்டுமெத்தமாக இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தினை முடக்கி, தமிழர்களுக்கான தனித்துவத்தைச் சிதைத்து தனிச் சிங்கள தேசமாக ஆட்சியமைத்து வாழ நினைக்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிர்காலத்தில் தகுந்த பதிலடி கொடுத்து நாம் தேசிய ரீதியாக முழுமை பெற வேண்டும்.

அடுத்த கட்டமாக பிறக்கின்ற இந்த புதிய ஆண்டில் நாம் ஒவ்வொருவரும் எம்மைச் சுயவிமர்சனத்திற்கு உட்படுத்தி சிந்தித்து கடந்த வரலாறுகளைக் கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் புதிய பாதையில், புதிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

எமது இளைஞர் சமூகமென்பது எதிர்காலத்தில் பல்துறை ஆற்றலுள்ள சமூகமாக வளர்ச்சி பெற வேண்டும். உண்மையில் அனைத்து இளைஞர்களும் ஒன்றுபட்ட சக்தியாக ஓரணியாகத் திரண்டு எமது இனத்தின் வாழ்விற்காக பொருளாதார ரீதியாகவம், கல்வி ரீதியாகவும் சமூக விழுமியங்களைப் பாதுகாக்கின்ற வகையிலும், அரசியல் ரீதியாக எமது உரிமைகளை வென்றெடுக்கின்ற ரீயிலும் ஒருமித்த செயற்பாட்டுடன் ஒன்றாகப் பயணித்தால் வரப்போகின்ற அனைத்துத் தடைகளையும் உடைத்தெறிந்து நாம் வெற்றிபெறலாம்.

தற்போதைய ஆட்சி மாற்றத்தில் பல்வேறு அரசியல் இடர்பாடுகளுக்கு மத்தியிலும், இலங்கை மீது சர்வதேச நாடுகளின் ஈடுபாடுகளுக்கு மத்தியிலும் நாம் எதிர்காலத்தில் பல சவால்களைச் சந்திக்க நேரிடப் போகின்றது. தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியிலும் நாங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை முன்னமே முடிவெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அன்புக்குரிய இளைஞர் யுவதிகளே எமது இனத்தின் எதிர்காலம் உங்கள் கைகளில் தங்கியிருக்கின்றது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு மிகவும் பெறுமதியான பொறுப்புகளை காலம் வழங்கியிருக்கின்றது. அந்தப் பொறுப்புகளை நன்கு புரிந்து செயற்படுவீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். பல்கலைக்கழக சமூகங்கள், பாடசாலை சமூகங்கள், சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புகள் போன்ற அனைத்துத் துறைகளிலும் ஈடுபடுகின்ற எமது இளைஞர் சமூகம் ஓரணியாக எதிர்காலத்தில் திகழ்ந்து செயற்பட வேண்டும்.

எமக்கான உரிமைகளை வென்றெடுக்கும் வரை ஜனநாயக ரீதியான எமது போராட்டங்களை நாங்கள் தொடருவோம். போராட்ட வடிவங்கள் மாற்றப்பட்டாலும் எமது இலட்சியத்தில் உறுதிகொண்டு ஒன்றாக நின்று செயற்பட வேண்டும். எனவே எதிர்காலத்தில் பல மறைமுகமான சவால்கள் எமக்கு முன்னாள் நிற்கின்றது. அந்த சவால்களை புத்திசாலித்தனமாக இனங்கண்டு முறியடித்துச் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.