தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பணப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

தொழில் வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு மனிதவலு வேலைவாய்ப்பு தினைக்களத்தினால் தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட பேச்சு, கவிதை, சித்திரம், கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பணப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு (10) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட மற்றும் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கே இப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நவீன தொழிநுட்பவளர்ச்சி காரணமாக இன்று மாணவர்கள் உட்பட சமூகத்தில் வாசிப்பு மற்றும் எழுத்தாக்க ஆற்றல்கள் மீதான ஈடுபாடு வெகுவாக குறைந்து கொண்டு வருகின்றது. இவ்வாறான வேளையில் மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்வது பாராட்டத்தக்க விடயமாகும்.இதன் மூலம் கலாசார மற்றும் பண்பாட்டு பாரம்பரியங்கள் பாதுகாக்கப்படும் என்று இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மாவட்ட மட்டத்தில் 1,2 மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றவர்களுக்கு முறையே 5000,3000 மற்றும் 2000 ரூபா பணப்பரிசும் தேசிய ரீதியில் முதல் 10 நிலைகளுக்குள் வெற்றயீட்டிய இருவருக்கு முறையே பெறுமதியான பணப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், பிரதம கணக்காளர் எஸ்.பரமேஸ்வரன், நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ்.குருகுலசூரிய , மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.