வாழைச்சேனை பிரதேசத்திலும் பால்மா விநியோகத்தில் குழறுபடி

(எச்.எம்.எம்.பர்ஸான்)

நாட்டில் பால்மாக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வாழைச்சேனை பிரதேசத்திலும் பால்மா விநியோகத்தில் குழறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக வாழைச்சேனை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

பால்மாக்களை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் சிறு வியாபார தளங்களுக்கு பால்மாக்களை வழங்காமல் பெரிய வியாபார தளங்களுக்கு மாத்திரம் வழங்கிச் செல்கின்றனர்.

இதனால், சிறு வியாபாரிகளும் நுகர்வோரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அத்தோடு, பெரிய வியாபார நிலையங்களில் பால்மாக்களுடன் வேறு பொருட்களை கொள்வனவு செய்வோர்களுக்கு மாத்திரமே பால்மாக்கள் வழங்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி அனைவருக்கும் பால்மாக்கள் கிடைக்க வேண்டும் என வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர், வாழைச்சேனை பொலிஸ் உதவி பொறுப்திகாரி ஆகியோரின் கவனத்திற்கு வாழைச்சேனை வர்த்தக சங்கத்தினர் கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.