மாணவர்கள் பிரதேச மட்டத்திலிருந்து தேசிய மட்ட போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

பிரதேச மட்டங்களில் தெரிவாகும் மாணவர்கள் தேசிய மட்ட போட்டிகளில் பங்குபற்றி திறமைகளை வெளிப்படுத்துவதோடு, போட்டிகளில் வெற்றி பெறுவதற்கும் தயார்படுத்தப்பட வேண்டும். இதற்கு பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்தி மாணவர்களை வளப்படுத்த வேண்டும் என்று நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன் தெரிவித்தார்.

மனிதவள வேலைவாய்ப்பு திணைக்களத்தினால், தொழில் வழிகாட்டல் வாரத்தை முன்னிட்டு பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட ஆக்கத்திறன் போட்டி தொடர்களில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(11) பிரதேச செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதேச செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் மாணவர்கள் அண்மைக்காலமாக தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கட்டுரை, கவிதை, சிறுகதை, பேச்சு, பாடல் ஆக்கம், ஓவியம் என்று கலை இலக்கியம் சார் துறைகளில் பலர் பிரதேச மட்டம், மாவட்ட மட்டத்திலும் முதலிடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்கள் தேசிய மட்டத்திலும் சாதனை படைக்கக் கூடிய மாணவர்கள். இந்த மாணவர்களை தேசிய மட்ட போட்டிகளில் பங்குபற்றுவதற்கும் அந்தப் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கும் தயார்படுத்த வேண்டியுள்ளது. இவர்களுக்கு பாடசாலை மட்டத்திலும் பாடசாலைக்கு வெளியிலும் தொடர்ச்சியான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். இங்கு வருகை தந்திருக்கும் பெற்றோர்கள் தங்களுடைய மாணவர்களின் இத்தகைய திறன்களை இன்னும் இன்னும் வளப்படுத்தி எதிர்காலங்களில் தேசிய மட்டத்தில் சாதனை படைப்பதற்கு தேவையான வழிகாட்டல்களை செய்ய வேண்டும்.

கல்வியோடு இணைந்ததாக மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்துகின்ற போது அவர்களுடைய எதிர்காலம் பிரகாசமானதாக மாறுகிறது. பட்டப்படிப்பை பூர்த்தி செய்துவிட்டு தொழில் வாய்ப்புக்காக செல்லும் போது ஆளுமை நிறைந்த, ஆற்றல் நிறைந்த வல்லுனர்களாக பணியாற்றுவதற்கும் துறைசார்ந்த சாதனைகளை நிகழ்த்துவதற்கும் இத்தகைய ஆக்கத்திறன் செயற்பாடுகள் மாணவர்களுக்கு அவசியமான ஒன்றாக திகழ்கிறது என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.தால்சுறூன், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.பத்மசீலன், நிதி முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.முஜாஹித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.