ஜனாதிபதி, பிரதமரிடம்  டலஸ் பேசி நாகூர் ஆண்டகை தர்கா ஷரீபை புனித பூமியாக அறிவிக்க நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்

(மாளிகைக்காடு நிருபர்)

கல்முனை நாகூர் ஆண்டகை தர்கா ஷரீபின் 200வது கொடியேற்றத்தை முன்னிட்டு முத்திரை வெளியிட்டமை வரலாற்றில் முக்கிய நிகழ்வாகும். வரலாறுகள் ஒரு சமூகத்தின் மிகமுக்கிய பொக்கிஷமாக நோக்கப்படுகிறது.

இந்த நாட்டில் வெளியிடப்பட்ட முத்திரைகள் அனைத்தினதும் வரலாறுகள் பேணிப்பாதுகாக்கப்படுகின்றது. தேசிய வரலாற்று நீரோட்டத்தில் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் என்று அழைக்கப்படும் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப் இடம்பெற்றுள்ளது. இதனை முன்னெடுக்க இந்த நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் கலாச்சார அமைச்சர் என்ற அடிப்படையில் அவர்களின் வழிகாட்டலின் கீழ் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும செய்திருக்கும் சேவையை நாங்கள் மறக்க முடியாது. தேசிய ரீதியிலான வரலாற்று கோர்வையில் கல்முனையின் அடையாளத்தை இடம்பெற செய்தமைக்காக எங்களின் மக்கள் அவரை மறக்கமுடியாது என கல்முனை தொகுதி சார்பிலான திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ .அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற 200 ஆவது கொடியேற்ற விழாவையொட்டி முத்திரை வெளியிட்டுவைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

தேசிய இனமுரண்பாடுகளுக்கு மத்தியில் இந்த நாட்டிலுள்ள இன,மத பேதமில்லாது கடினமாக, ஊழலற்ற, தூய்மையான அரசியல் செய்பவர் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும. இதனை முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா எம்.பியும் சாட்சி பகிர்வார். இந்த அரசாங்கத்தில் வேறு கொள்கைகளை கொண்ட அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களை போன்று எல்லோரும் இருக்க மாட்டார்கள். அமைச்சர் டலஸ் அழகப்பெரும எவ்வித வேறுபாடுகளுமின்றி எல்லோரையும் ஒன்றித்து அழைத்து செல்லும் திறமை கொண்ட கண்னியமானவர். இலங்கை அரசியல் உஷ்ணம் பெற்று பல்வேறு முரண்பாடுகள் தோன்றியுள்ள காலகட்டமான இந்த காலத்தில் இந்த புனித பூமியின் மகிமையை அறிந்து இரண்டுவார காலத்தினுள் சகல விடயங்களையும் முடித்து கல்முனைக்கு வருகைதந்து முத்திரையை வெளியிட்டமையை நாம் கௌரவமாக பார்க்கிறோம்.

இந்த கல்முனை நாகூர் ஆண்டகை தர்கா ஷரீபை புனித பூமியாக அங்கீகரிக்க செய்து இந்த நாட்டிலுள்ள பெரியளவிலான வழிபாட்டுத்தளங்கள் எவ்வாறு அழகுபடுத்தப்பட்டு இருக்கிறதோ அதே போன்று இன்னும் ஒரு வருடத்தில் பள்ளிவாசலின் வெளிப்புற தோற்றம் அழகுபடுத்தப்படும். வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். ஜனாதிபதி, பிரதமரிடம் அமைச்சர் டலஸ் அழகப்பெரும பேசி இந்த நாகூர் ஆண்டகை தர்கா ஷரீபை புனித பூமியாக அறிவிக்க நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். எங்களின் அழைப்பை ஏற்று இன, மத வேறுபாடுகள் இல்லாது வருகை தந்த சகலருக்கும், இந்த விழாவை சிறப்பாக செய்ய உதவியவர்கள், முத்திரை வெளியீட்டை சாத்தியமாக்க உழைத்த சகல தரப்பினருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் அழைப்பின் பேரில் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, பொலிஸ் உயரதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், அடங்களாக நாகூர் ஆண்டகை தர்ஹா சரிப் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.