மட்டக்களப்பில் தொடரும் பருவ மழை  வெள்ளப்பெருக்கினால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேற்றம் 

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பில் தொடரும் பருவ மழையினால் வெள்ளப் பெருக்கேற்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்துவரும் மழையினால் வெள்ளப் பெருக்கேற்பட்டு மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டிருப்பதுடன் 7 பிரதேச செயலாளர் பிரிவுகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் 5 கிராம சேவகர் பிரிவுகளில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த மூன்று நபர்களும், வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவில் 5 கிராம சேவகர் பிரிவுகளில் இருபது குடும்பங்களைச் சேர்ந்த 66 நபர்களும், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகளில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 நபர்களுமாக 25 குடும்பங்களைச் சேர்ந்த 81 நபர்கள் இடம்பெயர்ந்து உறவினர் நன்பர்கள் வீட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர ஏறாவூர் பற்று, கோளைப்பற்று கிரான், மண்முனைப்பற்று, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர்பிரிவுகளும் வெள்ளத்தினால் வெகுவாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 3 ஆந் திகதியிலிருந்து இன்று (11) வரை பெய்த மழையினால் மொத்தமாக 241 குடும்பங்களைச் சேர்ந்த 885 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அளவான வீடு சேதம் இரண்டும், அடிப்படைக் கட்டமைப்பு பாதிப்பு ஒன்றும் பதிவாகியுள்ளதாக தேசிய அணர்த்த நிவாரண சேவை நிலையம் மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தது.