சீன வெளிவிவகார அமைச்சர் பிரதமரின் புகைப்படத்தை விமர்சித்த சாணக்கியன்!

சீன வெளிவிவகார அமைச்சரும் மகிந்த ராஜபக்ஸவும் கைக்குள் கைபோட்டு கணவன் மனைவி போல புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். இவர்கள் இவ்வாறு இருப்பதற்கான காரணம் இவர்கள் அந்த நாட்டின் அடிமைகளாக மாறிவிட்டார்கள் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இன்று மாலை மட்டக்களப்பு நொச்சிமுனை ஆலையடி சித்தி விநாயகர், கண்ணகியம்மன் ஆலயத்திற்கான மின்குமிழ் ஒரு தொகுதி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் வழங்கிவைக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியுதவியின் மூலம் குறித்த மின்குமிழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.

ஆலயத்தின் தலைவர் எஸ்.ருத்திரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆலய குருக்கள்,நிர்வாகசபை உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ஆலய பரிபாலனசபையினால் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

இலங்கை அரசாங்கமானது தனது மோசமான தீர்மானத்தின் ஊடாக அண்மையில் சீன நிறுவனம் ஒன்றுக்கு 690 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளது. விவசாய அமைச்சின் தவறான தீர்மானத்தின் காரணமாக சீனாவில் கழிவுப்பொருள்களாக ஒதுக்கப்பட்ட இலங்கையில் விவசாயிகள் பயன்படுத்த முடியாத உரங்களை இறக்குமதி செய்த போது அதனை இந்த நாட்டில் பயன்படுத்த முடியாது என நீதிமன்றம் கட்டளையிட்டதன் பிறகு சீனா இலங்கையில் உள்ள ஒரு வங்கியை தடைசெய்தது. அதனை தொடர்ந்து 690 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டது. இலங்கையின் பணத்தில் 130 கோடி ரூபாவுக்கு மேலாக தண்டப்பணமாக கட்டப்பட்டுள்ளது.

இந்த பணம் இந்த நாட்டின் மக்களது பணம். மகிந்த ராஜபக்ஸவின் குடும்ப தோட்டத்தில் தேங்காய் பறித்து விற்றோ, பசில் ராஜபக்ஸ விவசாயம் செய்து உழைத்த பணமும் இல்லை. இந்த நாட்டின் மக்கள் செலுத்திய வரிப்பணமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. மக்களது வரிப்பணத்தினையெடுத்து வேறு ஒரு நாட்டில் தேவையற்ற செலவினை செய்துவிட்டு இந்த நாட்டு மக்களை மிகவும் மோசமான நிலைக்குதள்ளியுள்ளனர்.

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அவருடன் மகிந்த ராஜபக்ஸவும் கைக்குள் கைபோட்டு கணவன் மனைவி போல புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். இவர்கள் இவ்வாறு இருப்பதற்கான காரணம் இவர்கள் அந்த நாட்டின் அடிமைகளாக மாறிவிட்டார்கள்.

இலங்கை மக்களின் நலன்கள் தொடர்பாக சிந்திக்கும் நிலையில்லை. இன்று இலங்கை மக்கள் பஞ்சத்தில் வாழும் போது தங்களின் எஜமானர்களை திருப்திப்படுத்துவதற்காக அந்த நாட்டுக்கு இவ்வாறு பெருந்தொகை பணத்தினை கொடுத்துள்ளனர். இதனை இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் நபர்களுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் உணர வேண்டும். இவர்கள் இன்று மக்கள் படும் கஸ்டங்களைப்பற்றி பேசாமல், மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசாமல் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில முக்கியமான பாடசாலைகளின் நிர்வாகத்திற்குள் தலையிடுகின்றார்கள்.

கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும். இன்று ஆசிரியர்களை இடமாற்றுவதன் மூலம் மட்டும் இந்த பிரச்சினைகளை தீர்க்கலாம் என்றால் அவர்கள் முட்டாள்களாகத்தான் இருக்க வேண்டும். இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட வேண்டும்.

கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை என்பது பெயர்பெற்ற மிக முக்கியமான பாடசாலையாகும். தங்களது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக, தங்கள் அரசியல் இலாபங்களுக்காக சிவானந்தா தேசிய பாடசாலை போன்ற பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இவ்வாறான அரசியல் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தி பாடசாலைக்குள் கல்வி நடவடிக்கைகள் சீராக நடக்கவேண்டும்.

எப்போது மாணவர்களின் கல்வியில் கைவைத்து தங்கள் அரசியலை முன்னெடுத்தார்களோ அன்றே அவர்களின் அழிவுகாலம் ஆரம்பமாகிவிட்டது. இனிவரும் காலத்திலாவது மக்கள் நலன்சார்ந்த விடயங்களில் அவர்கள் செயற்படவேண்டும்.

13ஆம் அரசியல் சீர்த்திருத்தத்தை அமல்படுத்தக்கோரி தமிழ் கட்சிகள் திட்டத்தை ஆரம்பித்து இருந்தார்கள். இந்த வேலைத்திட்டம் தமிழரசுக்கட்சி ஆரம்பத்திலே தலைவருக்கு கூட அழைப்பில்லாமல் அந் நிகழ்வுகள் இடம்பெற்றது. அதிலே இரண்டாவது மூன்றாவது கூட்டத்தின் பின் எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா கலந்து கொண்டிருந்தார்.

அதிலேயே நான் நினைக்கின்றேன் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இறுதியாக ஒரு கூட்டத்திலே மலையகத் தலைவர்கள், இஸ்லாமிய தலைவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய தமிழ் கட்சியின் அங்கத்தவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு வரைபு ஒன்றை தயார் படுத்தி அதை டிசம்பர் மாதம் 26ஆம் திகதி அனைவரும் தயார்ப்படுத்தியதாக அறியக்கூடியதாக இருந்தது.

அதனை அடுத்து அதில் சில மாற்றங்களை பற்றி எதிர்வரும் காலங்களில் பேச வேண்டும் என்று கூறி சில முன்மொழிவுகள் வந்திருந்தது. பலவிடயங்கள் பூர்த்தி அடையாமல் இருக்கின்றது என நினைக்கின்றேன். நான் பங்காளி கட்சிகளின் தலைவரும் அல்ல கட்சியின் தலைவரும் அல்ல இதை நேரடியாக கட்சியிலே தலைமைத்துவப் பதவியில் இருக்கும் நபர்களிடம் கேட்கவேண்டும். ஆனால் நிச்சயமாக அவ்வேலைத் திட்டம் கைவிடப்படவும் இல்லை அது முடிவுக்கு வரவும் இல்லை அவ்வேலைத் திட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

எம்மை பொறுத்தவரையில் நாம் கிழக்கை மட்டும் மையமாக வைத்து அரசியல் செய்யும் கட்சியல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சி என்பது வடக்கு கிழக்கில் உள்ள அரசியல் நிலைப்பாட்டை பற்றியும் நாம் சிந்தித்து செயல்படும் ஒரு கட்சி வடக்கு கிழக்கு என்ற இரு மாகாணங்களிலும் ஏ எதிர்காலத்தில் சிந்திக்கும் ஒரு கட்சி என்ற அடிப்படையில் என்ற கருத்து என்னுடைய கட்சியினுடைய கருத்தாக தான் கட்சியினுடைய நிலைப்பாட்டிலிருந்து தான் நாம் அதை பார்க்க வேண்டும் உண்மையிலேயே அந்த விரைவானது ஒரு முடிவுக்கு வரவில்லை.

பல பக்கத்தால் நான் 3 அல்லது 4 வரைபுகள் பற்றி அறிந்தேன். நாம் அதை இறுதியாக இந்திய தூதரகம் அல்லது இந்தியன் நாட்டிற்கு கையளிக்கும் அந்த வரைவை பார்த்த பின் அதை ஆராய்ந்து அந்த வரைவை பற்றி சில கருத்துக்களை சொல்ல ஒரு சில கட்சிகள் 13ஆம் திருத்தத்தை மாத்திரம் அமல்படுத்துங்கள் என்று சொல்லி இருந்தாலும் கூட சம்பந்தன் ஐயா உட்பட மாவை சேனாதிராசா ஐயா அவர்கள் கூறியிருந்தார்கள் 13ஆம் திருத்தம் மாத்திரம் அமுல்படுத்துவது தொடர்பில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாக சில விடயங்களில் சிலர் 13ஆம் திருத்தச் சட்டத்தில் உள்வாங்க படாததை இப்படியான பல விடயங்களை நாம் உள்ளடக்க வேண்டும் என கூறிய காரணத்தினால் இதுவரை சில பாகம் மட்டும் உள்ளது. இந்த அறிக்கை முடிவுக்கு வந்ததன் பின் இந்திய பிரதமருக்கும் இந்திய நாட்டினருக்கும் கையளிக்கப்பட்ட பின் நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் நான் கருத்தை எதிர்வரும் காலங்களில் தெரிவிக்கலாம்.