மட்டக்களப்பில் முஸ்லிம் மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் அநீதி; கிழக்கின் கேடயம் செயற்பாட்டாளர் எஸ்.எம்.சபீஸ் குற்றச்சாட்டு

முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டாக இணைந்து தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு " கிழக்கின் கேடயம்" கோரிக்கை 

(நூருல் ஹுதா உமர், பாறுக் ஷிஹான்)

மட்டக்களப்பில் 14 பிரதேச செயலக காரியாலயங்கள் உள்ளது. அதில் முஸ்லிம் பிரதேசங்களும் நிறைய இருக்கிறது. ஆனால் அங்கு இலங்கை நிர்வாக சேவையில் திறமையான, தகுதியானவர்கள் இருந்தும் பிரதேச செயலாளர்களாக நியமிக்கப்படாமல் உள்ளது ஏன்? அதற்கான முன்னெடுப்புக்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்கள் எடுப்பதில்லை. மற்றும் ஏனைய நிறுவனங்களில் கூட முக்கிய பதவிகளுக்கு ஒரு முஸ்லிம் அதிகாரியை கூட நியமிக்க முடியாத நிலை உள்ளது. இது தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டுப்பொறுப்புடன் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என  ” கிழக்கின் கேடயம்” பிரதம செயற்பாட்டாளரும், அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல் சம்மேளன தலைவருமான, மாநகரசபை உறுப்பினர் எஸ்.எம். சபீஸ் கேட்டுக்கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட அரச நிர்வாக அடக்குமுறைகள் தொடர்பில்  ” கிழக்கின் கேடயம்” திங்கட்கிழமை மாலை நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

அண்மையில் நியமனம் பெற்றுவந்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவரை பதவியேற்க முடியாதளவிற்கு தடுத்துள்ளார்கள். ஆனால் முஸ்லிங்கள் அதிகமாக உள்ள கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியை தமிழ் சகோதரர் ஒருவர் வகிக்கிறார். நாங்கள் யாரும் அதற்கு எதிராக போர்க்கொடி தூக்கவில்லை. ஏனெனில் அவர் தமிழராக இருந்தாலும் தகுதியானவர் என்பதே எங்களின் பார்வை. ஆனால் மட்டக்களப்பில் அந்த பார்வை இல்லாமலாகி இனவாதமாக நோக்குகிறார்கள். அதேபோன்று மட்டு கச்சேரிக்கு பிரதம கணக்காளராக வந்தவரையும் வரவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். காணியிலும் பலத்த பிரச்சினைகள் உள்ளது.

இந்த மாவட்டங்களில் சரியான காணிப்பங்கீடுகள் இல்லாமையால் முஸ்லிம் மக்கள் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 6000 பெரும், தமிழ் மக்கள் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 300 பேர் மட்டுமே வாழும் நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பில் யார் பேசுவது? முஸ்லிம் தலைமைத்துவங்கள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பது யார்? நமது தலைவர்கள் நமது மக்களின் பிரச்சினைகளை எப்போது பேசுவது. தமிழ் தலைமைகள் முஸ்லிம் தலைமைகளின் தேவைகளை நிபர்த்திசெய்ய தேவையானவற்றை வழங்கிவிட்டு முஸ்லிங்கள் தொடர்பில் பேசமுடியாதவாறு வாய்ப்பூட்டு  போட்டு அவர்களின் காலடியில் கிடப்பவர்களாக மாற்றியுள்ளார்கள். நாங்கள் கூறியவற்றை விட பலமடங்கு பிரச்சினைகள் மட்டக்களப்பில் உள்ளதை அங்குள்ள உயரதிகாரிகளிடம் வினவினால் தெரிந்து கொள்ளலாம். இந்த விடயங்களை தீர்க்க சகல முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும்.

இந்திய பிரதமருக்கு அனுப்ப தமிழ் பேசும் கட்சிகள் தயாரித்த ஆவணத்தில் என்ன விடயங்கள் இருக்கின்றது என்பதை பகிரங்கப்படுத்தமால் ஒப்பமிடக்கூடாது எனும் விடயத்தை மக்கள் மயப்படுத்தி சிறந்த வழிவகையொன்றை ஏற்படுத்திய சமூக பொறுப்புள்ள ஊடகவியலாளர்கள், இவ்விடயம் தொடர்பில் துணிந்து வெளிப்படையாக கருத்துக்களை கூறிய தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் போன்ற தலைவர்கள், கட்டுரை எழுதிய எழுத்தாளர்கள், இவ்விடயம் தொடர்பில் முன்வந்து குரல்கொடுத்த இளைஞர்கள், இவ்விடயம் தொடர்பில் தமது தலைமைகளுக்கு வலுவான கோரிக்கைகளை முன்வைத்த மு.கா மற்றும் ம.கா உயர்பீடத்தினர் எல்லோருக்கும் ” கிழக்கின் கேடயத்தின்” சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

துருக்கித்தொப்பி போராட்டம் முதல் ஜனாஸா எரிப்பு போராட்டம் வரை அரசாங்கத்துடனும், ஏனைய சமூங்களுடனும் போராடி வந்த முஸ்லிம் சமூகம் இன்று தனது தலைமைத்துவங்களுடன் போராடி, பணிந்து, மன்றாடி சமூகத்தை காட்டிக்கொடுக்க வேண்டாம் என்று கேட்கும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. இதனால் தான் கட்சி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் மக்களுக்காக ” கிழக்கின் கேடயம்” குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. 20 வருடங்களுக்கு முன்னர் மரணித்த தலைவர் அஷ்ரபின் தேவை இப்போது வெகுவாக மக்கள் மத்தியில் உணரப்படுகிறது.

ஜனாதிபதி சிங்கள மக்களை பாதுகாக்கிறார், தமிழ் கட்சிகள் தமிழ் சகோதரர்களின் குரலாக ஒலிக்கிறார்கள், ஆனால் முஸ்லிம் தலைவர்கள் ஏனைய சமூகங்களின் அபிலாசைகளை பாதுகாப்பதில் குறியாக இருக்கிறார்கள். முஸ்லிங்களின் நிம்மதியான வாழ்க்கையை பற்றி அவர்கள் சிந்திக்கிறார்கள் இல்லை. மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் அட்டூழியங்கள் ஓய்ந்தபின்னர் அரச நிர்வாக பயங்கரவாதம் நடைபெறுவதை நன்றாக அறிகின்றோம் என்றார். இந்நிகழ்வில் ” கிழக்கின் கேடயம்” செயற்பாட்டாளரும், பிரதேச சபை உறுப்பினருமான ஏ.ஆர்.எம். பஸ்மீரும் கலந்து கொண்டு மட்டக்களப்பில் நடக்கும் நிர்வாக சீர்கேடுகள், ஒடுக்குமுறைகள், முஸ்லிங்களுக்கு நடக்கும் அநீதிகள், வளசுரண்டல்கள் என பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கருத்து வெளியிட்டார்.