மோடிக்கு அனுப்பும் ஆவணத்தில் கையொப்பமிட்ட 7 பேரும் த. தே.கூ. சார்ந்தவர்களே! 

பாரதப்பிரதமர் மோடிக்கு அனுப்பும் ஆவணத்தில் கையொப்பமிட்ட ஏழு தலைவர்களும் தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்களும், ஏற்கனவே தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி புதியகட்சிகளை அமைத்தவர்களுமே என்பதே உண்மை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் (10) தெரிவித்தார்.

தமிழ் கட்சிகள் தயாரித்த ஆவணம் தொடர்பாக மேலும் கூறுகையில்.

ஏற்கனவே கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஆரம்பத்தில் இருந்த வடகிழக்கில் உள்ள தமிழ்பேசும் கட்சிகளின் தலைவர்களும், மலையக கட்சிகளில் சில தலைவர்களும் கூடி இவ்வாறான ஆவணங்கள் தயாரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் தலைமையிலும் ஒருகூட்டத்தை நடத்தி அழகு பார்த்தனர் தமிழ்தலைவர்கள். அ தே ஹக்கீம் ஆவணத்தில் கையொப்பம் இடாமல் காலை வாரியுள்ளார்.

ஏற்கனவே 13வது அரசியல் யாப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தயாரிக்கப்பட்ட ஆவணத்தை ஏற்கமுடியாது அடிப்படை கொள்கையான சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தவேண்டும். இணைந்த வடக்கு கிழக்கிற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சி வலியுறுத்திய நிலையில் அந்த ஆவணம் இழுபறி்நிலை ஏற்பட்டதுடன் இலங்கை தமிழரசுகட்சி அரசியல் பீடம் இறுதியாக இணையவழி கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஒன்பது உறுப்பினர்களும் அந்த ஆவணத்தை நிராகரித்துள்ளதாகவும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஊடக மாநாட்டில் பகிரங்கப்படுத்தியிருந்தார்.

இவ்வாறான நிலையில் தற்போது வடக்கு கிழக்கை பிரதித்துவப்படுத்தும் தமிழ்தேசிய கட்சிகளை சேர்ந்த ஏழு கட்சி்தலைவர்களான
தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பத்தன், இலங்கை தமிழரசு கட்சிதலைவர், மாவை.சேனாதிராசா, தமிழீழ விடுதலை இயக்க தலைவர் செல்வம். அடைக்கலநாதன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஷ் பிரமச்சந்திரன், தமிழ் மக்கள் விடுதலை கழகத்தலைவர் த.சித்தாத்தன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தலைவர் சி.வி.விக்கினேஷ்வரன், தமிழ் தேசிய கட்சி தலைவர் என்.ஶ்ரீகாந்தா ஆகிய ஏழுபேர் தற்போது அந்த ஆவணத்தில் கையொப்பம் இட்டுள்ளனர்.

ஆனால் பல கூட்டங்களில் ஒன்றாக கலந்து கொண்டு ஊடகங்களில் முகத்தைக்காட்டி ஒற்றுமை தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டு வந்த தமிழ்முற்போக்கு முன்னணி தலைவர் மனோகணேசன், ஶ்ரீலங்காமுஷ்லிம் ஹாங்கிரஷ் தலைவர் ஹக்கீமும் இந்த ஆவணத்தில் கையொப்பம் இட பின்வாங்கியுள்ளனர்.

இதில் இருந்து வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் உணரக்கூடியது புரையோடிப்போய் உள்ள வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு என்பது வடக்கு கிழக்கு தமிழ்மக்களுக்கான தனித்துவமான பிரச்சனை என்பதை மலையகத்தலைவரும்இ முஸ்லிம் தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதை இது கோடிட்டுக்காட்டுகிறது.

இந்த ஆவணத்தில் கையொப்பம் இட்ட ஏழு தமிழ் தலைவர்களையும் நாம் நன்றாக ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் அனைவருமே 2001ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயனித்தவர்களே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

2001, 2004, 2010இபொதுத்தேர்தல்களில் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு 2015 பொதுத்தேர்தலில் பிரிந்து சென்ற ஈபீஆர்எல்எவ் கட்சி தலைவர் சுரேஷ்பிரேமச்சந்திரன், இதேபோல் இதே ஆண்டுகளில் எல்லாம் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் ரெலோ கட்சி ஊடாக பயணித்து 2015ல் பிரிந்து புதியகட்சி எனும்பெயரில் இயங்கும் என்.ஶ்ரீகாந்தா, 2013மாகாணசபை தேர்தலுக்காக கொழும்பில் இருந்து தமிழ்தேசிய கூட்டமைப்புக்குள் வரவழைக்கப்பட்டு வடமாகாண முதலைமைச்சராக வெற்றிபெற்று அதன்பின்னர் 2018காலப்பகுதியில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பித்த சி.வி.விக்கினேஷ்வன் உட்பட இந்த ஆவணத்தில் கையொப்பம் இட்டவர்கள் அனைவரும் பல கட்சிகளாக தம்மை அடையாளப்படுத்தினாலும் அனைவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்களும்.
தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி புதிய கட்சிகளை அமைத்தவர்களும் மட்டுமே பாரதப்பிரதமருக்கு அனுப்பும் ஆவணத்தில் கையொப்பம் இட்டுள்ளனர் என்ற உண்மையை அனைவரும் புரிந்து கொள்வது அவசியம்.

இதில் இருந்து தமிழ்தேசிய கூட்டமைப்பு எப்போதும் இணைந்த வடக்கு கிழக்கு கொள்கையுடன் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தியே தமது அரசியல் செயற்பாடுகளை முன்எடுத்து வருகிறது என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது.