(நூருல் ஹுதா உமர்)
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காஸிமின் 2021ம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் தெரிவு செய்யப்பட்ட காரைதீவு கல்விக் கோட்டத்தின் கீழ் உள்ள கமு/கமு/சபீனா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு பாடசாலை அலுவலக தளபாடங்களும் உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் நிதியொதுக்கீட்டில் மாவடிப்பள்ளி றஹ்மானியா கலாசார நிலையத்திற்கு ஒலிபெருக்கி உபகரணங்களும், மாவடிப்பள்ளி பொது நூலகத்திற்கு புதிய புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டது. அதே போன்று திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் தெரிவுசெய்யப்பட்ட மாளிகைக்காடு மேற்கு கரைவாகு கலை இலக்கிய மன்றத்திற்கு இலத்திரனியல் உபகரணங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில் பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் கலந்து கொண்டு பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வுகளில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்தீபன், கணக்காளர் என்.ஜயசர்மிகா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் தி.மோகனகுமார், கமு/கமு/சபீனா முஸ்லிம் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம். அஸ்மி, ஆசிரியரும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன அறிவிப்பாளருமான ஏ.எல். நயீம், கலைஞர் எஸ். ஜனூஸ், பிரதேச செயலக உத்தியோகத்தர் கள், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.எம். இஸ்மாயில் உட்பட பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.