புலம்பெயர்ந்துள்ளவர்கள் முடிந்தளவு வறுமை நிலை மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க முன்வரவேண்டும்

புலம்பெயர்ந்துள்ளவர்கள் முடிந்தளவு வறுமை நிலையில் உள்ளவர்களுக்கான வீடுகளை அமைத்துக்கொடுக்கமுன்வரவேண்டும் என சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளரும் தொழிலதிபருமான க.துரைநாயகம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் சமூகசேவகர் தொழிலதிபர் க.துரைநாயகம்
அவர்களின் சொந்த நிதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மிகவும் வறிய நிலையில் எந்த
அடிப்படைவசதியும் அற்ற நிலையில் குடிசையில் வாழ்ந்த குடும்பம் ஒன்றுக்கு 08 இலட்சம் பெறுமதியில் வீடு ஒன்றினை அமைத்து அதனை கையளிக்கும் நிகழ்வு  நடைபெற்றது.

சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு. விமலநாதன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியன்குளம் பகுதியில் சிறிய களிமண் வீட்டில் எந்த அடிப்படை வசதியும் அற்ற நிலையில் யானையின் தாக்குதல்கள் மத்தியில் வாழ்ந்துவந்த குடும்பம் ஒன்றுக்கே இந்த வீடு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் உதயம் அமைப்பினர் கள விஜயத்தினை மேற்கொண்டபோது குறித்த குடும்பத்தின் நிலைமை தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு அவை சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் கவனத்திற்கு
கொண்டுவரப்பட்டது.

அதனை தொடர்ந்து சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் துரைநாயகம் அவர்களது மகன் விஜி மகள் சுஜி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு சுமார் 08 இலட்சம் ரூபா செலவில் குறித்த வீடு அமைக்கப்பட்டு இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.