திருக்கோவில் பிரதேசத்தில் நீண்டகாலமாக ஆவணங்களின்றி குடியிருக்கும், விவசாயக் காணிகளுக்கான ஆரம்ப கட்ட விசாரணைகள் முன்னெடுப்பு

(திருக்கோவில் நிருபர்-எஸ்.கார்த்திகேசு)

திருக்கோவில் பிரதேச செயலாளரின் தலைமையில் 1618 விண்ணப்பங்களுக்கான விசாரணைகள் ஆரம்பம்.

அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலக நிருவாக எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் நீண்ட காலமாக முறையான காணி ஆவணங்கள் இன்றி குடியிருக்கும் மற்றும் விவசாய செய்கைகளில் ஈடுபட்டு வருவோருக்கான காணி ஆவணத்தை வழங்குவதற்கான ஆரம்ப கட்ட காணி விசாரணைகள் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் முன்னேடுக்கப்பட்டு வருகின்றன.

இவ் ஆரம்ப கட்ட காணி விசாரணைகள் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ. கஜேந்திரனின் தலைமையில் பிரதேச செயலக காணிப் பிரிவினால் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றன

அரசின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் நீண்ட காலமாக முறையான காணி ஆவணங்கள் இன்றி குடியிருப்போர் மற்றும் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் 1618 நபர்கள் தமக்கான காணி ஆவணத்தினை பெற்றுக் கொள்ளும் வகையில் விண்ணப்பங்களை திருக்கோவில் பிரதேச செயலகத்தில் வழங்கி இருந்தனர்.

அந்தவகையில் காணி ஆணையாளரின் 2008ஃ04ஆம் இலக்க சுற்று நிருபத்திற்கு அமைவாக திருக்கோவில் பிரதேச செயலாளரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக காணி ஆவணம் கோரி விண்ணப்பத்தவர்களுக்கான ஆரம்ப கட்ட காணி விசாரணைகள் சட்டம் மற்றும் சமுக நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் இம்மாதம் 06 ந் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி 09ந் திகதி வரை திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ் ஆரம்ப கட்ட காணி விசாரணைணகளில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் காணி உத்தியோகத்தர்களான பூ.கோவிந்தசாமி ந.நந்தகுமார் திருமதி லோஜினி கோகுலன் கிராம உத்தியோகத்தர் உ.உதயகுமார் மற்றும் காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு ஆரம்ப கட்ட காணி விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.