மட்டு. மாநகர முதல்வரால் ஆணையாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி. சரவனபவன் அவர்களால் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் ஒத்துவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் அனுமதியுடன் மாநகரசபையின் ஆணையாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை சபையின் அனுமதியுடன் மீளப்பெறப்பட்ட நிலையில் அந்த அதிகாரங்களில் தலையிடுவதை தடைசெய்யக்கோரி மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.

இன்றைய தினம் குறித்த வழக்கானது மட்டக்களப்பு மேல் நீதிமன்றின் நீதிபதி எம்.என்.அப்துல்லா தலைமையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பாக இன்றையதினம் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

மாநகர முதல்வர் தி. சரவணபவன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட தடையீட்டு எழுத்தாணை கூறும் விண்ணப்ப வழக்கானது இன்றைய தினம் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது எதிர் மனுதாரர்கள் சார்பில் சில ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டது. அதாவது மனுதாரர்கள் சார்பில் கோப்பிடப்பட்ட மாற்று சத்திய கூற்று பிரதிகள் தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என்றும் குறித்த பிரதிகள் கிடைக்காத படியால் உடனடியாக இந்த வழக்கை இறுதித் தீர்ப்பு கட்டளைக்கு நியமிக்குமாறு விண்ணப்பம் செய்து அதற்கு மேலதிகமாக ஒரு எழுத்து மூல சமர்ப்பணத்தையும் திறந்த நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

விண்ணப்பம் தொடர்பில் எமது எதிர் சமர்ப்பண விண்ணப்பம் செய்திருந்தோம். இதில் மேன்முறையீட்டு நீதிமன்ற ஒழுங்கு விதிமுறைகளை சுட்டிக்காட்டி இருந்தோம். அந்த அடிப்படையில் இரு சமர்ப்பணங்களையும் அவதானித்த கௌரவ நீதிபதி அவர்கள் குறித்த விடயம் தொடர்பாக மாற்றுச் சத்தியக்கூற்று பிரதி கிடைக்காத காரணத்தினால் தமது கட்டளைக்காக எதிர்வரும் 24ஆம் திகதி திகதி வழக்கை ஒத்திவைத்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.