வாழைச்சேனை பிரதேச சபை பணியாளர் தாக்கியமைக்கு நீதி கோரி போராட்டம்

(ந.குகதர்சன்)

வாழைச்சேனை பிரதேச சபையின் சுகாதார பணியாளர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து சபை உத்தியோகத்தர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை பணிப்புறக்கணிப்பு மற்றும் கவனஈர்ப்பு போராட்டத்தில் சபை முன்பாக ஈடுபட்டனர்.

வாழைச்சேனை பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தரின்; வேண்டுகோளுக்கிணங்க அரச காணியில் தற்காலிக கொட்டகை அமைத்துள்ளதை அகற்றுமாறு சபையின் பணியாளர்களுக்கு விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் நேற்று வியாழக்கிழமை கொட்டகையை அகற்றும் போது அக்காணியில் கொட்டகை அமைத்தவர் வருகை தந்து கல்லினால் தாக்குதல் நடத்திய போது பணியாளர் எம்.குமாரவேல் தாக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த நிலையில் வாழைச்சேனை பிரதேச சபையின் பணியாளர் தாக்கப்பட்டுள்ள நிலையில் தாக்கிய நபரை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரி சபை உத்தியோகத்தர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர் பணிப்புறக்கணிப்பு மற்றும் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாக்கப்பட்ட பணியாளருக்கு நீதி கோரி சபை உத்தியோகத்தர்களால் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித்திடம் மகஜர் வழங்கப்பட்டதுடன், நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடர்வதுடன், பிரதேசத்தில் திண்மக்கழிவுகள் அகற்றும் நடவடிக்கை இடம்பெறாது எனவும் பணியாளர்கள் தெரிவித்தனர்.

பணியாளரை தாக்கிய சந்தேத நபரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது காவல்துறையே ஊழியர்கள் மீதான தாக்குதலை கண்டு மௌனம் ஏன், ஊழியரை தாக்கிய குற்றவாளியை கைது செய், நீதி கிடைக்கும் வரை எமது பணிகளில் இருந்து விலகி நிற்கின்றோம், தாக்காதே தாக்காதே ஊருக்குள் பாடுபடும் ஊழியரை தாக்காதே, சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய் என பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைளுடன் நீதி கோரிய கோசங்களுடன் போராட்டத்தில் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த வியடம் தொடர்பில் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

குறித்த நபர் கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என பணியாளர்கள் கோரி வரும் நிலையில் திண்மக் கழிவு அகற்றும் நடவடிக்கையை செயற்படுத்தும் வகையில் பணியாளர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.

இது தொடர்பில் எதுவித அனுமதியும் இன்றி தங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிரந்தர கட்டட நிர்மாணப் பணியானது பிரதேச சட்டம் மற்றும் வீடமைப்பு தொடர்பான விதிகளை மீறும் சட்டத்திற்கு முரணான செயலாகும். குறித்த காணியானது கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவின் கீழ்வரும் அரச காணியென பிரதேச செயலாளரின் கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாலும், எமது சபையின் அனுமதி இன்றி நிர்மாணிப்பட்டு வரும் கட்டிடம் என்பதாலும் தங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டட நிர்மாண பணிகளை உடனடியாக நிறுத்துவதுடன். நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டட பகுதியினை அகற்றுமாறு கேட்டுக் கொள்வதுடன், தவறும் பட்சத்தில் சட்ட ரீதியாக குறித்த கட்டடம் அகற்றப்படுவதுடன், அதற்கான செலவீனங்களும் தங்களிடம் இருந்து அறவிடப்படும் என தெரிவித்து தவிசாளரினால் கட்டட நிர்மாண பணியினை மேற்கொண்ட ஆதம்லெப்பை முஹமது நியாஸ் என்பவருக்கு 2022.01.03ம் திகதி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.