கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) விநியோகிக்கப்படவுள்ளது.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளதாக சிங்கள இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வங்கிகளுக்கு தேவையான அளவு டொலர்களை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

டொலர் பற்றாக்குறை காரணமாக உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு, மிளகாய், சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் பெருமளவில் துறைமுகத்தில் தேங்கியுள்ளன.

இதன்காரணமாக சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர் இன்றைய தினம் விநியோகிக்கப்படவுள்ளதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, துறைமுகத்தில் தேங்கியுள்ள 800 அரிசி கொள்கலன்களை விடுவிப்பதற்காகவே டொலர் விநியோகிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் வர்த்தக அமைச்சு, தமக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

துறைமுகத்தில் கொள்கலன்கள் தேங்கியிருந்த காலப்பகுதியில், துறைமுகத்திற்கு செலுத்த வேண்டிய கட்டண தொகையை குறைக்குமாறு, தாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.