சுட்டுக் கொல்லப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரிடம் மக்களுக்கான தியாகம்.

(வாஸ் கூஞ்ஞ) யுத்தக்காலத்தில் மக்கள் தங்கள் வீடுகளிலே இருக்க முடியாத சூழ்நிலையில் சுட்டுக்கொள்ளப்பட்ட அமரர் அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரிடம் திகழ்ந்த அன்பு மக்களுக்கான பராமரிப்பு அவருடைய தியாகம் இன்று அவரை எம்மால் மறக்க முடியாத நிலையாக இருக்கின்றது என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் மறைமாவட்டத்தில் வங்காலை பங்கில் பணியாற்றும்போது சுட்டுக் கொல்லப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 37 வது ஆண்டு நினைவேந்தல் தினம் வியாழக்கிழமை (06.01.2022) வங்காலை புனித ஆனாள் ஆலயத்தில் பங்குத் தந்தை அருட்பணி எம்.ஜெயபாலன் அடிகளார் தலைமையில் அவ்வூர் மக்களால் நினைவு கூறப்பட்டது.இவ் நிகழ்வில் கலந்து கொண்ட மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை இங்கு ஆற்றிய உரையில் தொடர்ந்து தெரிவிக்கையில்
அமரர் அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் பற்றி இங்கு பங்கு தந்தை மற்றும் அவரின் மரணத்தை கண்ணால் கண்டவர்கள் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள்.
நான் வங்காலை வாழ் மக்களுக்கு மிகவும் நன்றிகூற கடமைப்பட்டவனாக இருக்கின்றேன்.
இந்த வங்காலை பங்கில் நான்கு வருடங்கள் கடமையாற்றிய நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட சிறந்த பணியாளர் மறைந்த அருப்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரை அவர் மறைந்தும் 37 வருடங்களாக நீங்கள் மறக்காது ஒவ்வொரு வருடமும் அவரை நினைவு கூர்ந்து நினைவேந்தல் நிகழ்வை செய்து அவரின் ஆனமாவுக்காக மன்றாடி வருகின்றீர்கள்.
அவர் வாழ்ந்த காலத்தில் நான் அவரை சந்தித்து உரையாடுவதற்கான சந்தர்ப்பங்கள் எனக்கு கிடைக்கப்பெற்றது எனக்கு ஒரு பாக்கியமே. இறைவனுக்கும் நன்றி கூறுகின்றேன்.
இவர் திருச்சிராப்பள்ளி குருமடத்தில் கல்வி கற்றபோதும் பின் இளம் குருவாக அவர் திகழ்ந்தபோதும் அவர் மன்னார் மறைமாவட்டத்தில் பணிபுரிந்த காலத்திலும் நான் அவரை நன்கு அறிந்து கொண்டமையால் அவர் துடிதுடிப்பான ஒருவராக அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தார் என்பது எனக்கு நன்கு தெரியும்.
மன்னார் மறைமாவட்டம் ஆரம்பமாகி இவ்வருடம் 41 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. இவ் மறைமாவட்ட ஆரம்ப காலத்திலேயே அவர் இவ் பங்கில் நான்கு வருடங்களாக பணி செய்துள்ளார்.
இவர் இந்த பங்கில் நான்கு வருடங்களாக செய்த சேவைகளுக்காக நீங்கள் மறக்காது இறைவனுக்கு நன்றி தெரிவிக்கின்றீர்கள்.
யுத்தக்காலத்தில் மக்கள் தங்கள் வீடுகளிலே இருக்க முடியாத சூழ்நிலையில் அவரிடம் திகழ்ந்த அன்பு மக்களுக்கான பராமரிப்பு அவருடைய தியாகம் இன்று அவரை எம்மால் மறக்க முடியாத நிலையாக இருக்கின்றது.
அருட்பணி மேரி பஸ்ரியன் மக்கள் செபிக்கும் தன்மையில் அவர் இறைபதம் அடைந்திருந்தால், இவர் மோட்சத்தில் இறைவனுடன் இருப்பார் என்றால் அவருடைய சிறப்பு தன்மையால் இன்றும் அவர் மக்களுக்கு பல நன்மைகள் செய்யும் இதனூடாக அவருக்கு புனிதர் பட்டம் பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிப்போம்.
இவருடைய வாழ்க்கை சரிதையை நான் அதிகமாக கற்றுக் கொண்டு இதனூடாகவும் அவர் இறைவனிடமிருந்து மக்களுக்கான நன்மைகள் வழங்குவதையும் நாம் உணர்ந்து அவரின் புனித நிலைமைக்கான முயற்சியை மேற்கொள்ளுவோம்.
ஆகவே அவரின் புனித நிலமைக்காக நாம் இறைவனை நோக்கி செபிப்போம். அவரின் புதுமைகள் வங்காலையில் மலர வேண்டும் என்றும் அனைவரும் செபிக்க வேண்டும். ஆகவே இன்றைய நாளில் அவருக்காக  பரித்தியாகம் செய்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன் என இவ்வாறு தெரிவித்தார் ஆயர் அவர்கள்.