அடிப்படை கொள்கையை நீக்கி ஆவணம் தயாரிப்பது பொருத்தமற்ற தமிழ்தேசிய அரசியலாகும்!

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்.

(இ.சுதா)

இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வு வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டித்தீர்வு என்பது இலங்கைத் தமிழரசுகட்சியின் கொள்கையாகவே இன்றுவரை உள்ளது. அடிப்படை கொள்கையை நீக்கி ஆவணம் தயாரிப்பது பொருத்தமற்ற தமிழ்தேசிய அரசியலாகும், சமஷ்டி அடிப்படையிலேயே சர்வதேசத்தில் யாருக்காவது எழுத்து மூல ஆவணம் அனுப்பபட வேண்டுமே தவிர அதனை வெட்டிக்குறைத்து மாற்றம் செய்து அனுப்புவது எமது நிலைப்பாட்டில் தளம்பல் போக்கையே பிரதிபலிக்கும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதித் தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சமர்ப்பிப்பதற்கென தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து ஆவணம் தயாரிக்கும் முயற்சியில் ஏன் தமிழரசு கட்சி பின்னடிக்கிறது என ஊடகவியாளர் கேட்டபோதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்துக்கூறுகையில்,.

இலங்கையில் கடந்த 1956 இல் இருந்து 2009, மே மாதம் வரை இலட்சக்கணக்கான உயிர்களை பலிகொடுத்த இனம் தமிழர்கள் மட்டுமே, சிங்களவர்களை பொறுத்தமட்டில் ஆயிரக்கணக்கானவர்களும்முஸ்லிம்களை பொறுத்த வரை நூற்றுக்கணக்கானவர்களுமே போராட்டத்தால் மாண்டுள்ளனர்.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினையே இலங்கையின் இனப்பிரச்சினை என கடந்த 73, வருட பேசு பொருளாக இருந்து வருகிறது. அரசியல் தீர்வுக்காக இன்றுவரை மூன்றரை இலட்சம் மக்களை பலிகொடுத்தும், அதற்காக எந்த ஒரு தீர்வும் இன்றி வாழும் ஒரு இனமாக உள்ளவர்கள் தமிழர்கள் மட்டுமே.

இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான தீர்வு அமைய வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே தந்தை செல்வா கடந்த 1949 டிசம்பர் 18, இல் இலங்கைத் தமிழரசு கட்சியை ஆரம்பித்தார். அந்த கட்சியின் ஊடாக பல அகிம்சை ரீதியிலான போராட்டங்களும் ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவை அனைத்தையும் இலங்கையை மாறி மாறி ஆட்சிசெய்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கமும் ஏமாற்றி தட்டிக்கழித்தமையால் 1976 மே14 இல் வட்டுக்கோட்டை தீர்மானத்தில் தமீழீழ அரசை நிறுவும் தீர்மானத்தை தந்தை செல்வா தலைமையில் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதும் அதன் பின்னர் 36, விடுதலை இயக்கங்கள் ஆயுதம் ஏந்தி போராடும் நிலை ஏற்பட்டதும் அதனால் திம்பு பேச்சு வார்த்தை இடம்பெற்று 1987 யூலை 29 இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 13 வது அரசியலமைப்பு தோற்றம் பெற்று மாகாணசபை முறை ஏற்படுத்தப்பட்டது.

இந்த 13 வது அதிகாரப் பரவலில் தமிழ் மக்களுக்கு நியாயமான அதிகாரங்கள் இல்லை என்று அப்போதய தமிழர் விடுதலை கூட்டணி, தமீழீழ விடுதலை இயக்கம், தமீழீழ விடுதலைப்புலிகள் எல்லாம் முதலாவது வடகிழக்கு இணைந்த மாகாண சபைத் தேர்தலை புறக்கணித்ததும் ஆனால் இந்திய அமைதிப்படையின் தூண்டுதலால் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி, ஈழத் தேசிய ஜனநாயக முன்னணி் மட்டும் தமிழர் தரப்பாகவும் ஏனைய தேசிய கட்சிகள், ஶ்ரீலங்கா முஸ்லிம் ஹாங்கிரஸ் என்பன அந்த தேர்தலில் போட்டியிட்டு இந்தியப் படையால் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வெல்ல வைக்கப்பட்டு வரதராஜப்பெருமாளை முதலமைச்சராக்கியதும் அவரும் சரியாக ஒரு வருடம் மூன்று மாதங்கள் மட்டுமே முதலமைச்சராக பதவியில் இருந்து பின்னர் தமிழீழ பிரகடனத்தை உதட்டால் உச்சரித்து இந்திய அமைதிப்படையின் கப்பலில் ஏறி இந்தியாவில் வாழ்ந்த வரலாறுகள் எல்லாம் தமிழின அரசியலில் உண்டு.

அதன் பின்னர் 1987 யூலை 29, இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்னர் 2009 மே 18 வரை தமீழீழ விடுதலைப் புலிகள் மட்டும் ஆயுதப்போராட்டத்தை மேற்கொண்டு மௌனித்த பின்னர் தற்போது 12 வருடங்களாக ஆட்சியாளர்களுடனும் பாரதப் பிரதமருடனும், சர்வதேச நாடுகளுடனும் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளை கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகள், புலம்பெயர் உறவுகள் எல்லாம் மேற்கொண்டு வருகின்றனர்.

கூட்டமைப்பு ஜனநாய ரீதியாக 2009, க்குப் பின்னரும் 2010, 2015, 2020 ஆகிய பொதுத் தேர்தல்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில், வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வையே வலியுறுத்தி வடகிழக்கு மக்களிடம் வாக்குகள் பெற்ற கட்சியாக அதிகூடிய ஆசனங்களை பெற்ற தமிழ்த்தேசிய கட்சியாக இன்றுவரை உள்ளது.

அந்த கொள்கையுடன் பயணிக்கும் கூட்டமைப்பின் பிரதான கட்சியாகவுள்ள தமிழரசுக்கட்சி தற்போது பல தமிழ்கட்சிகள் இணைந்து பாரதப் பிரதமர் மோடிக்கு எழுத்துமூல ஆவணம் ஒன்றை வழங்கும்போது அடிப்படை கொள்கையை விட்டு அதில் யாரையும்
திருப்திப்படுத்துவதற்காக முக்கிய விடயங்களை நீக்கி ஆவணம் தயாரிப்பது தவறு என்பதே தமிழரசுகட்சியின்
நிலைப்பாடு என மேலும் கூறினார்.