மட்டக்களப்பில் அடைமழை; 120மி.மீ மழை வீழ்ச்சி பதிவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழையால் தாழ் நிலப்பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பபுதியிலுள்ள மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் பட்டாபுரம் கிராமத்தில் அதிளவு வெள்ள நீர் தேங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பெரியபோரதீவு மட்பாண்ட வீதியில் அமைதுள்ள வீட்டிலிருந்து தென்னை மரம் ஒன்றும் காற்றினால் சரிந்து அயல் வீட்டின் மீது வீழ்ந்துள்ளது.

இதுஇவ்வாறு இருக்க மட்டக்களப்பில் 120.4 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், கிரானில் 58.8 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், உன்னிச்சையில் 49.0மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், உறுகாமத்தில் 51.4மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், வாகனேரியில் 158.7மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், கட்டுமுறிவில் 49.0மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், நவகிரியில் 56.0மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், தும்பங்கேணியில் 64.5மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், மைலம்பாவெளியில் 103.4மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், பாசிக்குடாவில் 89.0மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், கல்முனையில் 24.6 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், செவ்வாய்கிழமை(04) காலை 8.30மணிவரையில் கடந்த 24 மணித்தியாலத்தில் பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு நிலையப் பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் தெரிவித்தார்.

இது இவ்வாறு இருக்க செவ்வாய்கிழமை காலை 6 மணிவரையில் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 29அடி 4அங்குலம், உறுகாமம் உளத்தின் நீர்மட்டம் 15அடி 4அங்குலம், வாகனேரி 18அடி 0அங்குலமும், நவகிரிக்குளத்தின் நீர்மட்டம் 29அடியாகவும், தும்பற்கேணிக்குளத்தின் நீர்மட்டம் 15அடி 8அங்குலமாகவும், உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து அடைமழை பெய்து வருவதனால் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் காக்காச்சுவட்டை – சின்னவத்தை வீதி, வெல்லாவெளி – மண்டூர் வீதி, மாலையர்கட்டு – றாணமடு வீதி, ஆகியவற்றை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் கிரான் வீதியை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால் அவ்வீதிப் போக்குவரத்திற்கு இயந்திரப்படகு பயன்படுத்தப்பட்டு வருவதாக மட்டக்களப்பு அனர்;த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.