அதாவுல்லா எம்.பி சாய்ந்தமருது நகர சபை விடயத்தில் இனியும் ஏமாற்ற கூடாது

(பாறுக் ஷிஹான்)

சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையை வைத்து – இன்னும் இன்னும் அந்த மக்களை தேகா தலைவர் ஏமாற்றக் கூடாதென முகாவின் பிரதிப் பொருளாளரும் உயர்பீட உறுப்பினருமான ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை(3) மாலை ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

கல்முனை மாநகர சபையின் பதவிக்காலம் பெப்ரவரி மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் – 2022 பெப்ரவரியில் சாய்ந்தமருது நகர சபை மலரும் என்று கூறி 9000 வாக்குகளை கபளீகரம் செய்த அதாவுல்லா – பொதுத் தேர்தலிலும் அம்மக்களின் வாக்குகளை பெற்றார். ஆனால், நகர சபை இதுவரை சாய்ந்தமருதுக்கு கிடைக்கவில்லை.

சாய்ந்தமருதைச் சேர்ந்த – தேகா முக்கியஸ்தர் சலீமும் – அதாவுல்லாவுடன் இணைந்து , சாய்ந்தமருது நகர சபை கோஷத்தை முன்வைத்து வாக்குகளை பெற்று ஏமாற்றி வருகின்றார்.இதுவொரு ஆரோக்கியமான செயற்பாடல்ல..
ஒருபோதும் – அதாவுல்லாவினால் நகர சபையை பெற்றுத் தர முடியாது. அவருக்கு அரசாங்கத்தில் பலம் இல்லாமை என்பது வர்த்தமானி இரத்துச் செய்யப்பட்டவுடனேயே அறிய முடிந்தது.

2022 பெப்ரவரி மாதத்துக்கு இடையில் அதாவுல்லாவும் சலீமும் நகர சபையை பெற்றுத் தர வேண்டும். இல்லையேல் – தங்களால் முடியாது என மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக கூறி ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.. இன்னும் இன்னும் சாய்ந்தமருது மக்களை ஏமாற்ற முனையக் கூடாது என்றார்.