அதாஉல்லா எம்.பியை சந்தித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம். 

(நூருல் ஹுதா உமர் )அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் கிளைச் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் முன்னாள் அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு திங்கட்கிழமை கிழக்குவாசலில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது கடந்த 21.12.2021 தொடக்கம் 24.12.2021 வரை நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கையின் காரணங்களான சட்டப்பூர்வமான மருத்துவ இடமாற்ற சபையின்  அனுமதியின்றி விஷேட மருத்துவ நிபுணர்களின் இடமாற்ற பட்டியலைத் வெளியிடுதல், முறையான மருத்துவ இடமாற்ற சபையின் அனுமதியின்றி உள்ளக பயிற்சியை நிறைவு செய்த மருத்துவர்களுக்கு நியமனம் வழங்குதல், 2022 ஆண்டுக்குரிய தர மருத்துவர்களின் இடமாற்ற பட்டியலை வெளியிடுவதில் அமுலாக்கல் திகதியை பின்பற்றாமை, முறையான நடைமுறையின்றி முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தவினால் மருத்துவ நிருவாக தரத்தில்  மேற்கொள்ளப்பட்ட பிழையான விடயங்களை திருத்துவதற்கு அமைச்சரவை வழங்கிய அங்கீகாரத்தை நடைமுறைப்படுத்த தவறியமை, இலங்கை மருத்துவ சபையின்  தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாமை, தேசிய சம்பளக்கொள்கை மீறல், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சினுள் பணியாற்றும் பல்வேறு  துறைகளுக்கான ஊழியர்களுக்கிடையில்  சம்பளக் கொள்கை மீறல் பிரச்சினைகளை  உருவாக்க சுகாதார அமைச்சின் கடிதத்தலைப்பைப் பயன்படுத்துகிறார் போன்ற விடயங்களை அரச வைத்திய அதிகாரிகள் சங்க அக்கரைப்பற்று கிளையினர் முன்னாள் அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவுக்கு விளக்கினர்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கைகள் நியாயமானவை என இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததாகவும், மேலும் இது விரைவாக தீர்க்கப்பட வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்க அக்கரைப்பற்று கிளை  வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.