ஓட்டமாவடியில் வீதிக்கு இறங்கிய பொதுமக்கள்

க.ருத்திரன்.
மட்டக்களப்பு ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) பாடசாலை காணி சுவீகரிப்பு மற்றும் அதிபர் இடமாற்றத்தினை கண்டித்து பொற்றோர்கள் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் ஒன்றிணைந்து கொட்டும் மழை என்றும் பாராமல் பாடசாலையின் வாயில் காவினை பூட்டி வீதியில் இறங்கி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி  விடயம் தொடர்பாக கேள்வியுற்றதும்  இன்று காலை பாடசலைக்கு முன்பாகவுள்ள வீதியில் ஓன்று கூடியவர்கள் வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு குறித்த சம்வத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இந் நடவடிக்கையினால் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. வாழைச்சேனை பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகைதந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது மதியம் 1 மணி வரை நீடித்தது. மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் குறித்த நேரத்திற்கு சம்பவ இடத்திற்கு வருகை தராமையினால் போராட்டத்தில் காலதாமதம் ஏற்பட்டது.
இதனையடுத்து இவ்விடயத்திற்கு தீர்வு பெற்று தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் மற்றும் ஓட்டமாவடி மேற்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா ஆகியோரின் கவனத்திற்கு விடயத்தினை கொண்டுவந்தனர்.
இதன்படி சம்பவ இடத்திற்கு வருகை தந்த இருவரும் வலயக் கல்விப் பணிப்பாளருடன் தொலைபேசி ஊடாக தொடர்பினை ஏற்படுத்தியிருந்தனர்.
வலயக் கல்விப்பணிப்பாளர் வரும் வரை தங்களது போராட்டத்தினை கைவிடமாட்டோம் என கோஷங்களை எழுப்பினார்கள்.
பின்னர் வலயக் கல்விப்பாணிப்பாளர் உமர்மௌலான கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு சமூகமளித்து சபை தவிசாளரினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்திஜீவிகளினுடனான கலந்துரையாடல் நிகழ்வில் பங்குபற்றியிருந்தார். கலந்துரையாடல் நிகழ்வு காலதாமதமானதால் கொட்டும் மழையில் காத்திருந்த பெற்றோர்கள் ஆத்திரம் கொண்டு கலகத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் வலயக் கல்விப்பணிப்பாளர்  தமது பதிலை இவ்வாறு தெரிவித்தார்.
அதிபரின் இடமாற்றமானது கல்வி அமைச்சின் செயலாரினால் மேற்கொள்ளப்பட்ட விடயமாகும்.அவர் தற்போது எமது அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளார்.
அமைச்சின் செயலாளரினால் அதிபரின் இடமாற்றம் தொடர்பாக இரத்துச் செய்யப்பட்ட கடிதம் கிடைக்கப் பெறும் சந்தர்ப்பத்தில் மீண்டும் குறித்த பாடசாலைக்கு அவர் இணைக்கபடுவார் என்றும் குறித்த கட்டடமானது பல்கலைக் கழகம் சார்ந்த மட்டத்தில் கனிணி வசதிகளை கொண்டமைந்ததாகவும் பெற்றோர்கள் இப் பிரதேசத்தில் இதன் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கின்றமையினால் பிரிதொரு இடத்திற்கு இடமாற்றம் செய்வது தொடர்பாக தமது கருத்தினை அமைச்சின் செயலாளருக்கு தெரிவிப்பதாக கருத்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
கல்வி அமைச்சின் விசேட திட்டத்தின் பிரகாரம் 2015 ஆம்ஆண்டு நாட்டில் 14 வலயங்களில் தகவல் தொடர்பாடல் தொழல்நுட்ப கற்கை நிலையங்கள் அமைக்கப்பட்டன.அதில் ஒன்றாக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மத்தி வலயமான ஓட்மாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் இவ் நிலையம் அமைக்க்பட்டது.தற்போது இவ் பாடசாலையில் 1500ற்கும் மேற்பட்ட மாணர்கள் கல்வி பயில்வதனால் பாடசாலைக்கு நிலப்பரப்பு குறைவாக காணப்படுவதனாலும்  எதிர்காலத்தில் புதிய வகுப்பறை கட்டடங்கள் அமைப்பதில் சிக்கல் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி பெற்றோர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.