பேசாலையில் கொட்டும் மழையில் மூவியரசர் பெருவிழா

வாஸ் கூஞ்ஞ)
மன்னார் மறைமாவட்டத்தில் ‘மூவியரசர் பட்டினம்’ என முன்னோர் காலத்திலிருந்து அழைத்துவரப்படும் பேசாலை கிராமத்தில் முவியரசர் பெருவிழாவை பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பங்கு மக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருவது காலா காலமாக இடம்பெற்று வரும் ஒரு புனித நிகழ்வாகும்.

இந்த நிகழ்வு கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு அடுத்துவரும் ஞாயிற்றுக்கிழமையே கொண்டாடப்பட்டு வருகின்றது.

இவ் விழாவை முன்னிட்டு ஆலய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் பேசாலையின் பாதுகாவலியாம் புனித வெற்றி அன்னையின் பலராலும் போற்றப்படும் புதுமைமிக்க திருச்சுரூபம் வருடத்தில் ஒருமுறை இந்நாளில் சிம்மாசனத்திலிருந்து இறக்கப்பட்டு இவ் கிராமத்தில் வலம் வருவதுடன் கடற்கரையூடாக கொண்டுவரப்பட்டு இவ் புதுமைமிக்க திருச்சுரூப பாதம் கழுவி கடலில் இவ் நீர் கலக்கப்படும் நிகழ்வும் இடம்பெறுவது வழமையாகும்.

இதற்கமைய இவ் விழா  ஞாயிற்றுக்கிழமை (02.01.2022) பங்குத் தந்தை அருட்பணி ஏ.ஞாணப்பிரகாசம் அடிகளாரின் தலைமையில் பங்கு பேரவையின் ஒழுங்கமைப்பில் இவ் புனித நிகழ்வு இடம்பெற்றது.

கொட்டும் மழையிலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ் புனித நிகழ்வில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.