கொவிட் நோய் தொற்றாளர்களின் இரு சிகிச்சை நிலையங்கள் மூடப்படும் அபாயம். நோயாளர்களுக்கு உணவுக்கான நிதி பற்றாக்குறையே காரணமாம்.

( வாஸ் கூஞ்ஞ)

மாகாண சபையில் கொவிட் நோயாளிகளுக்கான உணவுகளுக்கு நிதி பற்றாக்குறையால் மன்னாரில் இயங்கி வந்த கொவிட் தொற்றாளர்களுக்கான இடைத்தங்கல் சிகிச்சை முகாம்கள் இரண்டும் மூடப்படும் அபாயம் தோன்றியுள்ளது. மன்னாரில் கொவிட் மரணம் மிக குறைவாக காணப்பட்டாலும் மன்னாரில் கடந்த இரு மாதங்கள் இரு நாட்களில் கொவிட் மரணம் 13 ஆக காணப்பட்டுள்ளது என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட செயலகத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் திங்கள் கிழமை (03.01.2022) இடம்பெற்றபோது மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் இவ் நிகழ்வில் கலந்து கொண்டு ‘கொவிட் 19 வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகள்’ என்ற தொணிப்பொருளில் உரையாற்றியபோது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்

கடந்த இரு வருடங்களாக நாம் ஒரு கடினமான நிலையில் பயணித்து வருகின்றோம். கொவிட் 19 இன் காரணமான எமது அபிவிருத்திகளையும் நாளாந்த கடமைகளையும் நாம் வழமைபோன்று செய்துகொள்ள முடியாத நிலையில் இருந்து வந்துள்ளோம்.

அந்த வகையில் இந்த வருடம் இந்த பெருந்தொற்று தொடர்ந்து நீடிக்கின்ற சந்தர்ப்பத்தில் மன்னார் மாவட்டத்தில் வழிமுறைகள் மற்றும் பொறிமுறைகள் தொடர்பாக நாம் இன்று சுருக்கமாக சிந்திக்க இருக்கின்றோம்.

இப்பொழுது அனைத்து திணைக்களங்களிலும் யாவரும் தங்கள் கடமைகளுக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நாம் இங்கு கவனிக்கும்போது சகலரும் தங்கள் கடமைகளுக்கு வருகை தந்துள்ளதைக் கவனிக்ககூடியதாக இருக்கின்றது.

இந்த நிலை கடந்த வருடம் இவ்வாறு அமையவில்லை. ஆகவே இந்த சூழ்நிலையில் அரச ஊழியர்களாகிய நாம் சுகாதார நடைமுறைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும்.

தடுப்பூசி வழங்கலில் அதாவது முதலாவது இரண்டாவது தடுப்பூசி வழங்கலில் மன்னார் மாவட்டமானது கடந்த வருடம் இலங்கை ரீதியில் சிறந்த ஓர் அடைவு மட்டத்தை எட்டியுள்ளது.

இந்த தடுப்பூசி வழங்கலில் மன்னார் மாவட்டம் முழுமையான கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இந்த தடுப்பூசி வழங்களால் ஏற்பட்டுள்ள விளைவுகள் என்ன என்று பார்ப்போமானால்

கொவிட் 19 இன் காரணமாக எமது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை குறைப்பதும் அத்துடன் கொவிற் தொற்றாளாளர்களின் மரணங்களை குறைப்பதுமே ஆகும்.

கடந்த ஆண்டு யூலை, ஓகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இலங்கை முழுவதும் இந்த கொவிட் 19 தாக்கம் அதிகரித்து நோயாளிகளுக்கான ஓட்சிசன் தேவைகள் அதிகரிக்கப்ட்டது.

ஆனால் மன்னார் மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கலில் சிறந்து விளங்கியமையால் இந்த நிலமை இங்கு காணப்படவில்லை.

அத்துடன் இலங்கை ரீதியில் மிக குறைந்த கொவிட் தொற்றாளர்களின் மரணமும் மன்னாரிலேயே காணப்படுகின்றது.

தடுப்பூசி வழங்களில் செயல்திறன் தற்பொழுது படிப்படியாக குறைவடைந்து வரும் இந்த சூழ்நிலையில் இலங்கை பூராகவும் பூஸ்டர் தடுப்பூசி முப்பது வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வழங்கும் செயல்முறை நடைபெற்று வருகின்றது.

இதுவும் தற்பொழுது மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இருந்தும் நாட்டில் நிலவுகின்றது போன்று இவ் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்பவர்களின் ஈடுபாடு மன்னாரிலும் மிக குறைவாகவே காணப்படுகின்றது.

மன்னாரைப் பொருத்தமட்டில் முதலாவது தடுப்பூசியானது 85 வீதமான மக்கள் பெற்றுள்ளனர். இரண்டாவது தடுப்பூசியானது 77 சத வீதமானவர் பெற்றுள்ளனர்.

ஆனால் கடந்து மூன்று மாதங்களாக நாங்கள் இங்கு மன்னாரில் பூஸ்டர் தடுப்பூசியை வழங்கி வருகின்றோம். ஆனால் பூஸ்டர் தடுப்பூயை பெறுபவர்கள் 25 வீதத்தை இன்னும் தாண்டவில்லை.

இந்த தடுப்பூசிகளினால் உள்ள நன்மை தீமைகளை நாங்கள் இப்பொழுது உணரக்கூடியதாக இருக்கின்றது.

நவம்பர், டிசம்பர் இந்த ஜனவரி கடந்த இரு தினங்களில் இவ் காலங்களில் மன்னாரில் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.

மன்னாரில் கொவிட் மரணங்கள் 36 ஆகும். இதில் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி முதல் இரண்டு நாட்களிலும் மரணத்தின் எண்ணிக்கை 13 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல் இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியை போடாதவர்களின் மரணமே அதிகரித்து காணப்படுகின்றது.

ஆகவே இவ் மூன்றாவது தடுப்பூசியை சிரேஷ்ட பிரஜைகள் போட  வேண்டியது அவசியமாகின்றது.

கடந்த ஆண்டு ஆறு மாதங்களுக்குள் மயங்கி விழுந்தவர்கள் மாரடைப்பால் இறந்தவர்களின் தொகையும் அதிகமாக காணப்படுகின்றது.

இதைப்பற்றி தற்பொழுது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இது தொடர்பாக பூஸ்டர் தடுப்பூசி போடப்பட வேண்டிய அத்தியவசியமும் உணரப்படுகின்றது.

அலுவலக ரீதியாக இவ்வருடத்தில் முதலாவது இவ் தடுப்பூசி வழங்கல் மன்னார் மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை வழங்குவதற்கான ஆய்த்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் சிரேஸ்ட பிரஷைகளுக்கு இது ஒரு முன்மாதிரியாக காணப்படும் என நினைக்கின்றேன்.அத்துடன் டெங்கு நோய் மன்னாரில் பெரும் பிரச்சனையாக காணப்பட்டது.

பேசாலை பகுதியில் இவ் நோய்க்கு உள்ளாகியவர்களின் தொகை அதிகமாக காணப்பட்டு தற்பொழுது இது படிப்படியாக குறைந்தள்ளது. ஆனால் மன்னார் நகர் பகுதியிலுள்ள பகுதிகளில் இவ் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டு வருகின்றனர்.

நாளை (04.01.2022) தொடக்கம் இலங்கை ரீதியாக டெங்கு வாரம் ஆரம்பிக்கப்படுகின்றது. இது மன்னாரிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

சுகாதாரப் பகுதினராகிய நாங்கள் கடந்த வருடத்தைப்போன்று இவ்வருடமும் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து சாதாரண சுகாதார நடைமுறைகளை முன்னெடுத்துச் செல்ல இருக்கின்றோம்.

கடந்த வருடம் இவர்களால் எமக்கு நிறைய உதவிகள் கிடைக்கப்பெற்றது அதற்காக நாம் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

நாட்டின் சூழ்நிலையால் எல்லா திணைக்களங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கமைய எங்கள் திணைக்கயங்களிலும் வழங்களில் பெரும் தாக்கத்தை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தாராபுரம் மற்றும் சிறுநாவற்குளம் ஆகிய கொவிட் தொற்று நோயாளர் இடைக்கால தங்கல் சிகிச்சை நிலையம் தற்பொழுது மூடப்பட்டுள்ளது.

காரணம் இவர்களுக்கு உணவு வழங்குவதற்கு மாகாண சபையில் நிதி இல்லாத தன்மையாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தடுப்பூசி வழங்கும் சிற்றூழியர்களுக்கான சிற்றுண்டிக்கான நிதியும் கிடையாது.

இருந்தும் முடிந்தளவு எங்களால் இயன்ற செயல்பாட்டை உங்கள் ஒத்துழைப்புடன் முன்னெடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம் என இவ்வாறு தெரிவித்தார்.