கிழக்கில் பலத்த மழை ! மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்பு !!!

(நூருல் ஹுதா உமர்) கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக மாவட்டத்தின் தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை நேற்று நள்ளிரவு முதல் பெய்து வருவதனால் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றாக பாதிப்படைந்துள்ளன.
இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் ஜனவரி மாதம் 04ஆம் திகதி வரை பெரும்பாலும் பொத்துவில்,  கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் மழையும் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் போன்ற பகுதிகளில் ஓரளவு மழையும் பெய்யும் சாத்தியம் உள்ளதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை பூமத்திய ரேகைக்கு சற்று வடக்காக சுமத்ரா தீவு அருகே காணப்படுகின்ற காற்று சுழற்சியானது மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றது.  இந்த அமைப்பு காரணமாக வங்காளவிரிகுடா கடல் பிராந்தியத்தில் இருந்து வடகிழக்காக இந்த காற்று சுழற்சியை நோக்கி காற்று ஈர்க்கப்படுவதன் காரணத்தினால் டிசம்பர் 03ஆம் திகதி வரை வடகிழக்கு பகுதிகளில் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது