சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸாருக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபப் பிரேரணை நிறைவேற்றம்

பாறுக் ஷிஹான்

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸாருக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் 45ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு கடந்த புதன்கிழமை (29) பிற்பகல்  மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்   தலைமையில் இடம்பெற்றபோதே இப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் இப்பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றினார்.இந்த அனுதாபப் பிரேரணையை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் வழிமொழிந்து ஆதரித்தார்.

இதையடுத்து இப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்படுவதாக அறிவித்த மாநகர முதலவர் ஏ.எம்.றகீப் இந்த அனுதாபத் தீர்மானத்தை குறித்த சம்பவத்தில் உயிர்நீத்த நான்கு பொலிஸாரினதும் குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்குமாறு சபைச் செயலாளரை அறிவுறுத்தினார்