சாதனை மாணவி தர்ஷிகாவுக்கு அம்பாறையில் பாராட்டு

(எம்.ஏ.றமீஸ்)

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி கற்று 13 தங்கப் பதக்கங்களை சுவீகரித்து சிறந்த மருத்துவ பீட மாணவியாக தெரிவு செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தினைச் சேர்ந்த தணிகாசலம் தர்ஷிக்காவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டறை இலக்கியப் பேரவையினால் இடம்பெற்றது.
அமைப்பின் தலைவரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான கலாநிதி ஹனீபா இஸ்மாயில் தலைமையில் அக்கரைப்பற்று கடற்கரைப் பூங்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) மாலை இடம்பெற்ற இந்நிகழ்வின்போது தணிகாசலம் தர்ஷிக்காவின் திறமையினைப் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
தமிழ் பட்டறை இலக்கியப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பு நிகழ்வின்போது ஓய்வு நிலை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம், ஓய்வு நிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.குணாளன், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் ஓய்வு நிலை மாவட்ட பணிப்பாளர் அக்கரையூர் அப்துல் குத்தூஸ், பட்டய நில அளவையாளர் ஏ.எல்.முகைதீன்பாவா, ஓய்வு நிலை கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.இராசமாணிக்கம், அக்கரைப்பற்று கல்வி வலய தமிழ்த்துறை ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ.சவுறுதீன், பிரதி அதிபர் எம்.அப்துல் றஸாக், அக்கரைப்பற்று மஸ்ஜிதுல் மீரா நம்பிக்கையாளர் சபைத் தலைவர் பி.ரி.செய்னுலாப்தீன்; உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பின் போது வழங்கப்படும் 37 தங்கப் பதக்கங்களில் சிறந்த மருத்துவ பீட மாணவி விருது உள்ளிட்ட 13 தங்கப் பதக்கங்களை தணிகாசலம் தர்ஷிக்கா சுவீகரித்துக் கொண்டார். மருத்துவ பீட இறுதிப் பரீட்சையிலும் தனது திறமையினை நிரூபித்து கிழக்கு மாகாணத்திற்கும் அம்பாறை மாவட்டத்திற்கும் குறிப்பாக ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்த இம்மாணவின் கடந்த கால செயற்பாடுகளை துறைசார்ந்த அதிதிகள் மெச்சிப் பாராட்டியதுடன் இதன்போது இம்மாணவி பாராட்டி கௌரவிக்ப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.