அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதாவுல்லா – ஜெயசிறில் அனல்பறக்கும் வாதப்பிரதிவாதம்

காரைதீவு வயல்பிரதேசத்தில் கார்ப்பட் வீதி அமைக்கும் பணி இடைநிறுத்தம்!
( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லா- காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை  ஜெயசிறில் ஆகியோரிடையே அனல்பறக்கும் வாதப்பிரதிவாதம் இடம்பெற்றது.


காரைதீவின் மேற்கே வயற்பிரதேசத்தில் பிரதேசசெயலகம், பிரதேசசபை மற்றும் நீர்ப்பாசனத்திணைக்களத்திற்கு தெரியாமல் கார்ப்பட் வீதி அமைக்கும் முயற்சியினை கண்டித்து, காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் சபையில் உரையாற்றும்போது  இடைநடுவில் அதாவுல்லா எம்.பி குறுக்கிட்டதால் இந்த அனல்பறக்கும் வாதப்பிரதிவாதம் ஏற்பட்டது.

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் முன்னிலையில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.வீரசிங்க தலைமையில் பிரதேசசெயலகத்தில் நேற்றுமுன்தினம்(27) நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் திணைக்களத்தலைவர்கள் பிரதேசசெயலாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் இக்கூட்டத்தில் வழமைபோல் கலந்துகொண்டனர். மாவட்ட அரசாங்க அதிபர் என்ற ரீதியில் பதில் அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் முன்னிலையில் நடைபெற்ற முதலாவது கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

வாதப்பிரதிவாதத்தின் முடிவில் பதில் அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் பதிலளிக்கையில் 
‘எமக்கு இதுவிடயம் தொடர்பாக பல மகஜர்கள் கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதுதொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரிடமும் கதைத்துள்ளேன். இப்பிரச்சினையை தீர்க்குமுகமாக  சகலரையும் இணைத்து  குழுஅமைத்து அதன் ஆலோசனைப்படி  அப்பணி பற்றி முடிவெடுக்கப்படும். அதுவரை  காரைதீவு வயல்பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய கார்ப்பட் வீதி அமைக்கும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. என்று தெரிவித்தார்.

சபையில் இடம்பெற்ற வாதப்பிரதிவாதம் தொடர்பாக தெரியவருவதாவது:

காரைதீவு வயல்பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய கார்ப்பட் வீதி அமைக்கும் பணி தொடர்பாக காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் சபையில் பிரஸ்தாபிக்கையில்:

எமது காரைதீவுப்பிரதேசத்தின் மேற்குவயற்பிரதேசத்தில் பண்ட்(அணைக்கட்டு) வயல் வீதியினை எம்மிடம் சொல்லாமல் வீதிஅபிவிருத்தி அதிகாரசபை கார்ப்பட் வீதியாக புனரமைப்புசெய்யவுள்ளது. நாம் அபிவிருத்திக்கு எதிரானவர்களல்ல. ஆனால் எமது முழுக்கிராமமும் பாதிக்கப்படும்போது அதனைப்பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. அதனால் பொதுநலஅமைப்புகள் ஆலயங்கள் ஏன் முழுக்கிராமமே இச்சர்ச்சைக்குரிய கார்ப்பட் வீதியை எதிர்க்கின்றன.
அதுதொடர்பாக மாவட்டஅபிவிருத்திக்குழுத்தலைவர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எமது மகஜர்களை அனுப்பியிருந்தோம்.
 இம்முறை பெய்த மழையில் காரைதீவு 10 11 12ஆம் பிரிவுகள் வெள்ளத்தில் அமிழ்ந்துபோயிருந்தன. இந்த பண்ட்வீதி அமைத்தால் முழுக்கிராமத்திற்கே ஆபத்து. இவ்வீதியமைப்பு பற்றி பிரதேசசெயலாளரிடம் கேட்டால் தனக்குத்தெரியாது என்கிறார். வயல்வீதி என்பதால் நீர்ப்பாசனத்திணைக்களத்திடம் கேட்டால் தமக்கும் தெரியாது என்கிறார்கள்.

அப்படியெனின் காரைதீவிலுள்ள  பிரதேசசெயலகம்; பிரதேசசபை மற்றும் நீர்ப்பாசனத்திணைக்களத்திற்கு தெரியாமல் எமது பிரதேசத்தில் இரகசியமாக இந்தக் கார்ப்பட் வீதி அமைக்கப்படுவதன் நோக்கம் என்ன? இதனை எமது மக்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டும். என்றார்.

உடனே குறுக்கிட்ட எ.எல்.எம்.அதாவுல்லா எம்பி “நீர் ஒரு இனவாதி.உமது அறிக்கையெல்லாம் பார்த்திருக்கிறேன்.இனவாதம் பேசுபவரின் கதையை சபை எடுத்துக்கொள்ளக்கூடாது.நீர் சபையில் பேசமுடியாது.அமருங்கள்’ என்று கூறினார்.

பதிலுக்கு 
தவிசாளர் கி.ஜெயசிறில் ‘நான் அனைத்து இனங்களையும் மதிப்பவன். அனைவரோடும் சிநேகமாகப் பழகுபவன். ஆனால் நீங்கள்தான் கடந்தகாலங்களில் அதிகாரத்தைவைத்துக்கொண்டு தமிழ்மக்களையும் தமிழர் பிரதேசங்களையும் புறக்கணித்து பழிவாங்கி இனவாதஅரசியல் செய்த வரலாறு உள்ளது.அதை நான் இங்கு பேசவரவில்லை. எனது மக்களுடைய பிரச்சினையை முன்வைத்தால் நான் இனவாதியா?  அப்படிப்பார்த்தால் நீங்கள்தான் இனவாதி.’ என்றார் .

தொடர்ந்து இப்படியாக வாதப்பிரதிவாதம் தொடர்ந்தது.

அவ்வேளையில், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.வீரசிங்க தலையிட்டு ‘இப்பிரச்சினையை நாங்கள் பார்க்கிறோம். பாதையைமைப்பு நிறுத்தப்பட்டுள்ளது.குழு அமைக்கப்பட்டு, அதன் ஆலோசனைப்படி முடிவெடுக்கப்படும்.அதுவரை பொறுமையாயிருங்கள் என்றார்.