துப்பாக்கி சூட்டிற்கு பலியாகிய அழகரெத்தினம் நவீனனின் நல்லடக்கம் பாண்டிருப்பில் நடைபெற்றது

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் (24) பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த பாண்டிருப்பைச் சேர்ந்த அழகரெத்தினம் நவீனன் உடைய பூதவுடல்  (26.12.2021) இரவு உறவினர்களிடத்தில் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து பொலிஸ் மரியாதையுடன் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு இன்று பாண்டிருப்பு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள், பொலிசார், விசேட அதிரடிப்படையினர் பிரதேச பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒலுவிலைச் சேர்ந்த கே.எல்.எம். அப்துல் காதர், பிபிலையைச் சேர்ந்த டி.பி.கே.பி. குணசேகர, சியம்பலாண்டுவவைச் சேர்ந்த டி.எம்.டி.எச். புஷ;பகுமார ஆகிய 4 பொலிஸார் உயிரிழதனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெஹிகம உட்பட இரு பொலிஸார் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கைதான பொலிஸ் சார்ஜென்டிற்கு ஜனவரி 06 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த 4 பொலிஸ் அதிகாரிகளினதும் வீடுகளுக்கு பொலிஸ் மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன  (26) விஜயம் செய்ததோடு, அவர்களது குடும்பத்தினருக்கு இலங்கை பொலிஸ் திணைக்களம் சார்பில் தனது அனுதாபங்களைத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.