நிதி அமைச்சர் பசில்ராஜபக்ஷ சிறந்த எதிர்கால திட்டமொன்றை வரவு செலவுத்திட்டத்தினூடாக சமர்ப்பித்து நாட்டை மீளவும் கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளார்

வி.சுகிர்தகுமார் 

 கொரோனா தாக்கத்தினால் இலங்கை மாத்திரமன்றி உலகமுழுவதும் பாதிக்கப்பட்டது. ஆயினும் நமது அரசாங்கம் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் செயற்பாட்டிற்காகவே அதிக நிதியை செலவிட்டது. இதன்காரணமாகவே தற்போது பொருளாதாரத்தில் இறுக்கமான நிலை தோன்றியுள்ளது.  மக்கள் விளக்கமின்றி எதிர்ப்பை வெளியிடுகின்றனர். இதனை செய்திகளினூடாக வெளியிட்டு மக்களை திசை திருப்ப சிலர் முயற்சிகின்றனர். இதன் காரணமாகவே  நிதி அமைச்சர் பசில்ராஜபக்ஷ சிறந்த எதிர்கால திட்டமொன்றை வரவு செலவுத்திட்டத்தினூடாக சமர்ப்பித்து நாட்டை மீளவும் கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளார் என அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திலக் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அம்பாரை ஆலையடிவேம்பு பிரதேசத்திற்குரிய 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவு திட்டத்திற்கமைய பிரதேச மட்ட அபிவிருத்திக்குரிய முன்னுரிமை அடிப்படையிலான முன்மொழிவுக் குழுக் கூட்டமானது பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திலக் ராஜபக்ஷ மற்றும் வனஜீவராசிகள் இராஜங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்காவின் செயலாளர் அஞ்சன திஸாநாயக்கா பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இக்; கூட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 2022ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட எதிர்பார்க்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் என்பனவற்றுக்கான நிதி முன்னெமாழிவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இதன்போது பிரதேச செயலாளர் கூட்டத்தின் நோக்கம் பற்றி குறிப்பிட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திலக் ராஜபக்ஷ அரசின் அபிவிருத்தி திட்டங்கள் நோக்கங்கள் தொடர்பாக விரிவான விளக்கமளித்தார்.
இதேநேரம் கூட்டத்தில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வனஜீவராசிகள் இராஜங்க அமைச்சர் விமல வீர திஸாநாயக்காவின் செயலாளர் அஞ்சன திஸாநாயக்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.