சம்மாந்துறை மண்ணுக்கு நன்றியுடையவராக இருப்பேன். (முஷாரப் எம்.பி)

நூருல் ஹுதா உமர்) சம்மாந்துறை கிழக்கு சிக்கன கடனுதவும் கூட்டுறவு சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் சங்கத்தின் தலைவர் ஏ. முகைதீன் பாவாவின் தலைமையில் சம்மாந்துறை வளத்தாப்பிட்டியில் (26) நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் மற்றும் கூட்டுறவு பிரதி ஆணையாளர் காரியாலய தலைமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம். பரீட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ; பாராளுமன்ற உறுப்பினரின் சமகால அரசியல் நகர்வு குறித்தும், அம்பாறை மாவட்டத்தில் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பு செய்வதற்காக கரிசணையோடு செயல்படுவது குறித்தும் சிலாகித்து பேசினார். விஷேடமாக சம்மாந்துறை கரங்காவட்டை காணி விடுவிப்பு சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் அயராது உழைப்பதாகவும் அதற்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார். மேலும், சம்மாந்துறை கிழக்கு சிக்கன கடனுதவும் கூட்டுறவு சங்கத்தின் காணியினை மேட்டு நிலமாக மாற்றி தொழிற்பேட்டை அல்லது வீட்டுத்திட்டம் ஒன்றை உருவாக்குவது பற்றியதான மூலோபாய ஏற்பாடுகளை செய்து அதற்கான நிதிகளை பெற்று திட்டத்தை முன்கொண்டு செல்வதற்கான யோசனையை பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இங்கு உரையாற்றிய திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் சம்மாந்துறை மண்ணுக்கு தான் எப்போதும் நன்றியுடையவராக இருப்பதாகவும் கடந்த பொதுத்தேர்தல் காலத்தின் போதான சம்மாந்துறை மக்களின் பெருந்தன்மை குறித்து மெச்சிப் பேசியதோடு சுனாமி காலத்தில் சம்மாந்துறை மக்கள் பாதிக்கப்பட்டவர்களை அரவணைத்து உதவியமை குறித்தும் நன்றிகளை வெளிப்படுத்தினார். மேலும் சம்மாந்துறை கிழக்கு சிக்கன கடனுதவும் கூட்டுறவு சங்கத்தின் நடவடிக்கைகளை பாராட்டிய அவர் குறித்த தொழிற்பேட்டை அல்லது வீட்டுத்திட்டம் அமைப்பது சம்பந்தமாக சங்கத்தினரையும், பிரதேச செயலாளரையும் இணைத்து பணியாற்றுவதற்கும் அரசாங்கத்திடம் பேசி தீர்வை பெற்றுத்தருவதற்கும் கரிசணையோடு கருமமாற்றபோவதாகவும் தெரிவித்ததுடன் சமகால அரசியல் குறித்தும், வடகிழக்கு இணைப்பு பற்றி தற்போது எழுந்துள்ள பேச்சாடல்கள் பற்றியும் நிகழ்வில் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம். ஸஹீல், டாக்டர் ஏ.என். றியாஸ், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் றனூஸ் இஸ்மாயில், தபாலதிபர் ஏ.எம். அமீன், விவசாயிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.