திருமலையில் சிப்பி அலங்கார தொழிலைமும்படுத்த நடவடிக்கைகள்

ஹஸ்பர் ஏ ஹலீம்_
திருகோணமலை மாவட்டத்தில்  கிராமங்களில் மேற்கொண்டு வருகின்ற பாரம்பரிய கைத்தொழிலை நவீன தொழில்நுட்பத்துடன் மேற்கொள்வதற்கு தேவையான ஒத்துழைப்பை அரசாங்கம் வழங்கி வருகின்றது.
இதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் 4 கிராமங்களை அரசாங்கம் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
அதனடிப்படையில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வெள்ளைமணல் சின்னம்பிள்ளைச்சேனை பிரதேசத்தில் சிப்பி அலங்கார தொழிலை மேற்கொண்டு வருகின்ற 25 பயனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள், இயந்திர சாதனங்கள் வழங்கும் நிகழ்வு (22)சின்னம்பிள்ளைச்சேனையில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கபில நுவன் அத்துகோரல தலைமையில் நடைபெற்றது.
வழங்கப்பட்ட பொருட்களின் பெறுமதி 2.8 மில்லியன் ரூபாவாகும்.  திருகோணமலையில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாக உள்ள பளிங்கு கடற்கரைக்கு செல்லும் பாதையில் இக்கிராமம் அமைந்திருப்பதுடன் இவ்வகை பொருட்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்பு காணப்படுவதாக பயனாளிகள் தெரிவித்தனர்.
இத்தொழிலை சிறப்பான முறையில் நவீன உத்திகளை கையாண்டு மேற்கொள்வதற்கு தேவையான பயிற்சிகளை அரசாங்கம் வழங்குவதற்கு திட்டமிட்டமை குறித்து பிரதேச பிரதேச மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
இவர்கள் குழுவாக செயல்பட்டு இத்தொழிலை மேற்கொள்வதற்கு  தேவையான பொது மண்டபம் ஒன்றும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு அவர்களது  பாவனைக்காக இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.
இக்கைத்தொழிலை சிறப்பான முறையில் மேற்கொள்கின்ற பொழுது அதனை மேலும் விருத்தி செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்க தயாராக இருப்பதாக இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை  முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலபதி, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பி.தனேஸ்வரன், அரச அதிகாரிகள், பயனாளிகள் மற்றும்  கிராம மக்களும் கலந்து கொண்டனர்.