(தலவாக்கலை பி.கேதீஸ்) நுவரெலியா உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நுவரெலியா உடபுசல்லாவ வீதியில் தற்போது புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த 50 வயது மதிக்கத்தக்க நுவரெலியா ரூவான்எலிய பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (23) வியாழக்கிழமை பிற்பகல் நுவரெலியா ஆவேலியாவில் இடம்பெற்றதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் வீதியில் வீழ்ந்துள்ள நிலையில், பின்னால் வந்த மாநகரசபைக்கு சொந்தமான பவுசர் ஒன்று அவர் மீது ஏறிச்சென்றதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.