இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் பொதுக்கூட்டம்.

(யூ.கே.காலித்தீன்)இயற்கையை நேசிக்கும் மன்றம் – ஸ்ரீலங்கா அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம் அன்மையில் நடைபெற்றது.
சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய கேட்போர் கூட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் சிறப்பு அதிதியாகவும், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் விஷேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்தார்கள்.
வைத்தியர்கள், எந்திரிகள், கல்வி மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள், தொழிலதிபர்கள், அரச திணைக்களங்கள் உள்ளூராட்சி மன்றம் மற்றும் கூட்டுத்தாபனங்களில் உயர் பதவிகளை வகிப்போர், ஊடகவியலாளர்கள், இளைஞர் விவகார துறைகளில் பணியாற்றுவோர், சமூக ஆர்வலர்கள் மற்றும் சூழல்நேய செயற்பாட்டாளர்கள் அத்துடன் கல்வி, உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் என பல்துறை சார்ந்தவர்களை உள்ளடக்கி இயற்கையை நேசிக்கும் செயற்பாட்டாளர்களைக் கொண்டுள்ள இவ்வமைப்பு சாய்ந்தமருது பிரதேத்தை மையமாக கொண்டு கடந்த இரண்டு வருடங்களாக இயங்கி வருகின்றது.
மேற்படி நிகழ்வின் போது 2022/2023ம் வருடத்திற்கான பொதுக்கூட்டத்தில் 11 பேர் தெரிவு செய்யப்பட்டனர் அதற்கமைவாக புதிய நிருவாகத்தில் அமைப்பின் பதவிரீதியாக ஏற்பாட்டாளராக ஏ.எம்.ஆஷிக், செயலாளராக ஏ.எம்.எம்.ஸாஹிர், பிரதி செயலாளர்களாக எந்திரி.எம்.சி.கே.நிஷாத் மற்றும் எம்.ஐ.சர்ஜூன், பொருலாளராக ஆர்.எம்.ஹனீஸ் அத்துடன் ஊடக இணைப்பாளராக யூ.கே.காலித்தீன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதோடு
வைத்தியர்.என்.ஆரிப், ஏ.எஸ்.அஸ்வர், ஏ.எச்.எம்.றிபாய், எம்.எஸ்.எம்.ஸபான் மற்றும் எம்.எம்.உதுமாலெப்பை ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாகவும் சபையோரினால் தெரிவு செய்யப்பட்டனர்.
இயற்கையை நேசிக்கும் மன்றம் – ஸ்ரீலங்கா (NLF) ஒரு சமுதாய அடிப்படையிலான தன்னார்வ அமைப்பாகும்.  இவ்வமைப்பு சுற்றுச்சூழல் மற்றும் அது தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு  சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, மாணவர்கள் மற்றும் தன்னார்வ செயற்பாட்டளார்களை விழிப்புணர்வூட்டல், ஊக்குவித்தல் மற்றும் இயற்கை பற்றிய கல்வியூட்டல்  செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.
மரநடுகை, கடலோரப் பாதுகாப்பு மற்றும் இயற்கையை பாதுகாத்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பிளாஸ்டிக் பாவனையை குறைத்தல், மீழ்சுழற்சி செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவித்தல், சேதன பசளை பயன்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் நஞ்சற்ற உணவுப் பொருள் உற்பத்தி மற்றும் பாவனையை ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளில் மிகுந்த ஆர்வம் கொண்டு கடந்தாண்டுகளிருந்து செயற்படுகின்றமை விஷேட அம்சமாகும்.
மேலும், இவ்வமைப்பானது கல்முனை மாநகர சபையுடன் இணைந்து, சாய்ந்தமருது பிரதேத்தில் தின்மக் கழிவகற்றல் செயற்பாடுகள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சுனாமி பேரழிவிற்குள்ளான சாய்ந்தமருது முகத்துவாரத்தை அண்டிய கடற்கரை பகுதியை தன்னார்வ அடிப்படையில் சுத்தம் செய்து, பொதுமக்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பங்களிப்புடன் ஒரு அழகிய உள்ளுர் பொழுதுபோக்கு தலமாகவும் மாற்றியுள்ளது.
இதற்கு ‘மருதூர் சதுக்கம்’ எனவும் கல்முனை மாநகர முதல்வரினால் பெயரிட்டு நிழல் தரும் மரங்கள் நட்டு தொடர்சியாக பராமரித்து வருவதுடன் சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள கடற்கரையோரம் மற்றும் இயற்கை பிரதேசங்களை பராமரிக்கும் செயற்பாடுகளை தொடர்சியான முறையில் முன்னெடுத்து வருகின்றது.
கழிவுக்ளை கொட்டுமிடமாக கடந்த காலங்களில் காணப்பட்ட முகத்துவார பாலத்துக்கருகில் தற்போது “மருதூர் சதுக்கம்”  நாளாந்தம் நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தரும் பொழுதுபோக்கு தலமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் தோற்றத்தின் பின்னர் இப்பிரதேச மக்களிடையே சுற்றுச்சூழல் பற்றிய ஆர்வமும், விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளதை செயற்பாட்டு ரீதியாக காணக்கூடியதாகவுள்ளது.
மருதூர் சதுக்கம் மற்றும் அதனோடு இணைந்ததாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ள ஏனைய பிரதேசங்களை திட்டமிடப்பட்ட முறையில் எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்யும் பொருட்டு அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்கள் அத்துடன் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களை அணுகி இவ்வமைப்பு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த காலம் தொட்டு இன்று வரை எவ்வித ஊதியமும் பெறமால் தன்னார்வத்துடன் அங்கு நடப்பட்டுள்ள் மரங்களுக்கும் அதன் பராமரிப்புக்கும் உதவி புரிந்து வந்த இரண்டு தோழர்களை கௌரவப் படுத்தி அவர்களுக்கு நினைவுச்சின்னமும் அமைப்பினால் வழங்கப்பட்டது.