மன்னார் பிரதேச சபை தவிசாளர் யார் என்பதற்கு சபையில் முற்றுபுள்ளியற்ற தன்மையில் தொடரும் சந்தேகம் கைகலப்பாக மாறி பெண் உறுப்பினர் வைத்தியசாலையில்.

( வாஸ் கூஞ்ஞ)

மன்னார் பிரதேச சபை தவிசாளர் யார் என்பதற்கான மயக்கநிலை தொடரால் அமர்வுகளில் வெளிநடப்பு தற்பொழுது கைகலப்பாக உருவெடுத்துள்ளது. மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு சமர்பிப்பதற்கான விஷேட கூட்டத்தில் உறுப்பினர்கள் மத்தியில் கைகலப்பும் கலாட்டாவும் இடம்பெற்றமையால் சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆசிரியரான பெண் உறுப்பினர் ஒருவர் சபையில் தாக்குதலுக்கு உள்ளாகியமையால் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பொலிசார் தீவிர விசாரனையை மேற்கொண்டுள்ளனர்.

மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சமர்பிக்கும் நோக்குடன் திங்கள் கிழமை (20.12.2021) இதன் தவிசாளர் எஸ்.எச்.எம் முஜாஹீர் தலைமையில் காலை 11 மணிக்கு ஆரம்பமாகியது.

இவ் சபை நடவடிக்கை ஆரம்பமாகியதும் ஏற்கனவே நடைபெற்ற 42, 43 ஆவது  இரு சபை அமர்வுகளில் எதிர் கட்சியினர் இவ் சபையின் தவிசாளர் யார் என்ற மயக்கம் காணப்படுவதால் அந்நேரம் சபை அமர்வுகளிலிருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.

இந்த நிலையிலேயே திங்கள் கிழமை (20.12.2021) இடம்பெற்ற இவ் வரவு செலவு சமர்பணம் செய்யும் இவ் விஷேட கூட்டத்தில் இதே கருத்து ஒலிக்கப்பட்டு வாத மற்றும் பிரதிவாதங்கள் இடம்பெற்றதுடன் கைகலப்பு, தவிசாளர் அமர்ந்திருக்கும் கதிரையின் மீது நீர் வீசப்பட்டு மேசையின் மீது இருந்த சிங்கக் கொடி உடைக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இவ் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற கலாட்டா சம்பவத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தில் கேட்டு உறுப்பினராக உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆசிரியரான பெண் உறுப்பினர் ஒருவர் இலங்கை தமிழரசு கட்சி சின்னத்தில் கேட்டு உறுப்பினராக வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரால் தாக்கப்பட்டு தற்பொழுது மன்னார் பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் தாக்குதல் தொடர்பாக பேசாலை பொலிசார் தீவிர விசாரனையில் ஈடுபட்டுள்ளனர் பெண் உறுப்பினர் மீது தாக்குதலை நடாத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ள இவ் சபை உறுப்பினரான சந்தேக நபரை பொலிசார் கைது செய்து பொலிஸ் விசாரனை;கு உற்படுத்துவதற்காக மன்னார் பிரதேச சபையில் முனைந்தபொழுது சந்தேக நபர் அவ்விடத்திலிருந்து மறைந்து விட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.