முன்மொழிவுகளுக்கு அனுமதி வழங்கும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள்

ஹஸ்பர் ஏ ஹலீம்_
2022 ம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் கிராமிய உற்பத்தி பொருளாதாரம் மற்றும் தொழில் முயற்சிகளை மேம்படுத்தும் வகையில் நிதியமைச்சரினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமாகிய கபில நுவன் அத்துக்கோரல தெரிவித்தார்.
புதிய தொழில் முயற்சிகளை இனங்கண்டு அவற்றுக்கு தேவையான நிதியுதவி, பயிற்சி மற்றும்  தொழிநுட்ப உதவிகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது. இதன் மூலம் உற்பத்தி பொருளாதாரம் வலுப்படுத்தப்படும். நாட்டுக்கு அவசியமான உற்பத்தியை நாமே உற்பத்தி செய்தல் காலத்தின் தேவையாக காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
2022 ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்திற்காக  மாவட்டத்தில் பிரதேச செயலக ரீதியாக பெற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளுக்கு அனுமதி வழங்கும்  மூதூர் விசேட பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று மூதூர் பிரதேச செயலகத்தில்(20)  நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உள்ளூர் உற்பத்திசார் முயற்சிகளை இனங்கண்டு அவற்றை அபிவிருத்தி செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். அதனடிப்படையில் நிதியமைச்சர் இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் பாரிய நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக இதன்போது மூதூர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய எம்.எஸ்.தெளபீக்  தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்திற்கு எதிர்வரும் வருடம் பல மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறவுள்ளது. நிதி அமைச்சர் வரலாற்றில் என்றுமில்லாதவாறு  கிராமிய அபிவிருத்திசார் விடயங்களுக்கு பாரிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளார். கொவிட் காரணமாக எமது நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.இழந்த பொருளாதார நலன்களை பெறும் நோக்கில் உற்பத்தி செயன்முறையை வலுப்படுத்த வேண்டும். எதிர்வரும் வருடம் நிதி ஒதுக்கீடுகள் காலாண்டு அடிப்படையில் கிடைக்கப்பெறவுள்ளது.காலாண்டுக்கு செயற்படுத்தி முடிக்கவேண்டிய வேலைகள் செய்து முடிக்காத சந்தர்ப்பத்தில் அடுத்த கட்ட நிதி ஒதுக்கீட்டை பெறமுடியாது போகும்.எனவே நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டங்களை சிறப்பாக திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் காணப்படுவதாகவும் அனைத்து உத்தியோகத்தர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாடிகோராள தெரிவித்தார்.
கிராம மக்களின் தேவைகளை அவர்களிடமிருந்தே  முன்னர் பெற்றுக்கொண்டதுடன்  அவை எதிர்வரும் வருடத்தில் செயற்படுத்தப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.
ஜீவனோகபாயம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்சார் முன்மொழிவுகளுக்கான  அனுமதி இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கிடைக்கப்பெற்றது.
இந்நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர் எம். பி .எம் .முபாரக், அரசியல் பிரமுகர்கள், திணைக்களத் தலைவர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதற்கிணைவாக  தம்பலகாமம், வெருகல்,சேருவில,கிண்ணியா மற்றும் கந்தளாய் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் விஷேட ஒருங்கிணைப்புகுழுக்கூட்டம் இன்று உரிய பிரதேச செயலகங்களில் நடைபெற்றதுடன் பெறப்பட்ட  முன்மொழிவுகளுக்கு ஒருங்கிணைப்புக் குழுவின்  அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.