(ஏறாவூர் நிருபர் -நாஸர்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைவாக வடக்கு , கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் சிறிய அளவிலான பால் உற்பத்தி மேம்பாட்டுச்செயல் திட்டத்தின்கீழ் நஞ்சற்ற பண்டங்களை நுகர்வோருக்கு வழங்கும் நோக்குடன் கிறீன் கோப் நிலையம் என்ற பெயரில் அமைக்கப்பட்ட உணவுப்பொருள் விற்பனை மையம் 20.12.2021 திறக்கப்பட்டது.
கிழக்கு மாகாண கூட்டுறவு , கால்நடை அபிவிருத்தி மற்றும் மீன்பிடி அமைச்சின் செயலாளர் கலாமதி பத்மராஜா மற்றும் மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் பதிவாளருமான ஏஎல்எம். அஸ்மி ஆகியோர் இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டார்.
பால் உற்பத்திப் பண்டங்கள், கால்நடைப் பண்ணையாளர் மூலம் உற்பத்தி செய்யப்படும் தானிய வகைகள் உள்ளிட்ட பொருட்கள் இந்நிலையத்தில் விற்பனை செய்யப்படும்.
பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அவர்களது உற்பத்திப் பொருட்களுக்கு சந்தைவாய்ப்பினை ஏற்படுத்துவதும் சேதனப்பசளையைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் நஞ்சற்ற உணவுப்பொருட்களை மக்களுக்கு விநியோகிப்பதும் இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமென பிரதேச கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்எம்எம். பைறூஸ் தெரிவித்தார்.
இந்நிலையம் மட்டக்களப்பு – செங்கலடி நகர பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ளது. இலுப்படிச்சேனை கால்நடை வளர்ப்பாளர் கூட்டுறவுச்சங்க தலைவர் கே. பிரதாபன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி மாவட்ட உதவி ஆணையாளர் கேவி. தங்கவேல், தலைமைக் காரியாலய உத்தியோகத்தர் எம்ஐஎம். உசனார்இவலயப்பொறுப்பாளர் கே.கிறீதரன், கால்நடை வைத்தியதிகாரி வி. மயுரன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்எம்எம். பைறூஸ் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.