இனவாதமில்லாத அரசை உருவாக்கி இந்த நாட்டை சஜித் பாரமெடுக்க தயார்.

(நூருல் ஹுதா உமர்) இந்த அரசாங்கம் அப்பாவி மக்களை பற்றி சிந்திப்பதில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பாரமெடுக்க எப்போதும் தயாராக உள்ளோம். அதன் பின்னர் மக்களின் பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்து வைப்போம். இந்த நாட்டை ஊழலில்லாமல் ஆட்சிசெய்ய ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசாவினால் முடியும். இனவாதத்தை கிளறி ஆட்சியை கைப்பற்றிய இந்த அரசாங்கம் கொலை, கொள்ளைகளை செய்துவருகிறது என முன்னாள் பிரதியமைச்சரும், குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான நளின் பண்டார தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை தேர்தல் தொகுதியின் பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹஸனலியின் தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் (19) மாலை இடம்பெற்றபோது அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியினரால் கடந்த 1994 இற்கு பிறகு இந்த நாட்டில் ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாமலே போகிவிட்டது. 1994 இற்கு பின்னர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, கோத்தாபாய ராஜபக்ஸ போன்றவர்கள்தான் ஜனாதிபதியாக வந்தார்கள். அவர்கள் விவசாயிகளுக்கு சரியான வசதிகளை செய்துகொடுக்க வில்லை. ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் எவ்வளவு முயன்றும் எமது நாட்டின் ஜனாதிபதியாக வரமுடியாமல் போனது. பிரதமராகத்தான் இறுதியாக அவரால் வர முடிந்தது. ஐக்கிய தேசிய கட்சியின் சார்பிலான ஜனாதிபதியாக இருந்த பலரும் விவசாயிகளுக்கு செய்த நல்ல விடயங்களை போன்று அவரால் கூட கடந்த காலங்களில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு ஒழுங்கான தீர்வை முன்வைக்க முடியாமல் போனது.

பசளைஇ கிருமிநாசிகள் என எதுவுமில்லாது விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர். இந்த பிரச்சினைகளுக்கு காரணம் கோத்தாபய இந்த நாட்டின் ஜனாதிபதியானதே. அவர் முன்வைக்கும் திட்டங்கள் யாவும் மூடத்தனமாக உள்ளது. நாட்டில் இப்போது எரிவாயுஇபால்மா, மரக்கறி, எரிபொருள், டொலர் என எதுவுமில்லை. வரிசையில் நின்று மக்கள் அத்தியாவசிய பொருள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயம் என்பது நெற்செய்கை மட்டுமல்ல. மரக்கறி முதல் ஏற்றுமதி பயிர்கள் என எல்லாம் அதில் அடங்கும். எதிர்வரும் புதுவருடத்தில் இருந்து சோற்றுக்கு மிகப்பெரிய பஞ்சம் ஏற்படும். சீனி முதல் பல்வேறு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் சீனியில் பாரிய மோசடி நடந்தது. இப்போது விவசாயிகளை காட்டி இந்த அரசாங்கம் கடுமையாக கொள்ளையடிக்கிறது.

இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் ஒற்றுமையாகவே வாழ்கிறார்கள். அவர்களின் ஒற்றுமையை சீரழிப்பது அரசியல்வாதிகளே. ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச மக்களை ஒற்றுமையாக வாழச்செய்ய பல்வேறு திட்டங்களை வைத்துள்ளார். விவசாயிகளுக்கு தேவையானவற்றை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி அரசினால் முடியும். அதனால் ஐக்கிய மக்கள் சக்தியை பலப்படுத்த எல்லோரும் எங்களின் விவசாய அமைப்புக்களுடனும் கட்சியுடனும் இணைந்து பயணியுங்கள் என்று அழைப்பு விடுத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை முன்னாள் தவிசாளர் சந்திரதாச கலபதி உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் கலந்து கொண்ட விவசாயிகள் தமது விவசாயம் சார்ந்த பிரச்சினைகள், அரசினால் வழங்கப்படும் நிவாரணங்களில் உள்ள குளறுபடிகள், சோதன பசளையினால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவித்தனர்.