அருணலு” தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு

நூருல் ஹுதா உமர்

2021 ஆம் ஆண்டில் இரண்டு இலட்சம் சமுர்த்தி குடும்பங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு வெள்ளிக் கிழமை (17) பிரதேச செயலாளர் எம்.சி.எம் ரஷ்ஷான் தலைமையில்இடம்பெற்றது.

இவ்வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்விற்கு முன்னாள் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். சமுர்த்தி திணைக்களமும் நிதியமைச்சும் இணைந்து மேற்கொள்ளும் சமுர்த்தி அருணலு – வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக இரண்டு இலட்சம் சமுர்த்தி குடும்பங்களை மேம்படுத்தும் நோக்கில் 12 பிரதேச செயலக பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இவ்வுதவிகள் வழங்கிவைக்கப்பட்டது.

இவ்வேலைத்திட்டமானது பிரதேச செயலாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் எம்.சி.எம் தஸ்லீமின் ஒருங்கிணைப்பின் கீழ் குறித்த வேலைத்திட்டம்  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதோடு  தொடர்ச்சியாக பயனாளிகளுக்கான உதவிகள் வழங்கிவைக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதியின் சுபீட்சத்தின்பால் நாட்டை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக குறித்த வேலைத்திட்டத்தின் ஊடாக வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பண்ணை வளர்ப்புக்குத் தேவையான மாடு, ஆடு, கோழி என்பனவும் வாழ்வாதார உபகரணங்கள், வங்கிக் கடன்கள், விவசாய உதவிகள் உள்ளிட்ட இயற்கை பசளை நடைமுறை உள்ளீடுகள் போன்ற உதவித் திட்டங்கள் சமுர்த்தி வங்கிகள் மற்றும் பிரதேச செயலகங்கள் ரீதியாக வழங்கி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் நஸீல், கணக்காளர் றிம்ஷியா அர்சாட், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், நிருவாக உத்தியோகத்தர் (கி.சே) எச்.பி. எந்திரசிறி யஷரட்ன, சமுர்த்தி திட்ட முகாமையாளர் பிரியந்தி வேரகொட, சமுர்த்தி வங்கி முகாமையாளர் டி. எழிழவன், சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.ஆஹிர், திட்ட உதவியாளர் எம்.ஐ.எம். மக்பூல், பிரிவுகளுக்கு பொறுப்பான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.