மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டுயானை மற்றும் மனித மோதல்களைத் தடுக்க யானைவேலிகளுக்கு மேலதிகமாக அகழி தோண்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. இம்மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 176 கிலோ மீற்றர் நீளமான யானை வேலிகளுக்கு அருகாமையில் அகழிகள் தோன்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரனின் ஏற்பாட்டில் வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சின் ஊடக செயலாளர் வசந்த சந்திரபாலவின் பங்குபற்றுதலுடன் சம்மந்தப்பட்ட திணைக்கள பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்பேது காட்டு யானைகளின் தாக்குதல்களால் வருடந்தோறும் சுமார் 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதாகவும், 10 தொடக்கம் 20 வரையான மனித மரணங்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து காட்டு யானைகள் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு வருவதைத் தடுப்பதற்காக காட்டுப் பகுதிகளுக்குள் சிறுகுழுங்கள் மற்றும் பழமரங்களை உருவாக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது எனவும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் இம்மாவட்டத்திலுள்ள 176 கிலோ மீற்றர் நீளமான யானை வேலிக்கு அருகாமையில் 10அடி அகலமும் 10 ஆழமும் கொண்ட அகழிகள் தோண்டுவது எனவும் இதன் முதற்கட்டமாக மங்களகம பிரதேசத்தில் 20 கிலோ மீற்றர் நீளத்திற்கு பரீட்சாத்தமாக அகழிதோண்டும் நடவடிக்கையினை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர இம்மாவட்டத்தில் 2021/2022 காலப்பகுதிக்காக 107 கிலோமீற்றர் நீளமான யானை வேலி அமைக்கும் பணிகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்விசேட கலந்துரையடலின்போது காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன், பிரதேச செயலாளர்கள், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், வனபாதுகாப்பு திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட பல திணைககளங்களின் உயர் அதிகாரிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.




