அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவது கிடையாது – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்)” நான் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவது கிடையாது. அரசியலைவிடவும் சிறந்த நிர்வாகத்தையே செய்ய விரும்புகின்றேன். அதனால்தான் கடந்த ஆட்சியில் முழுமைப்படுத்தப்படாத வீட்டுத் திட்டங்களை முழுமைப்படுத்தி மக்களுக்கு வழங்கி வருகின்றேன். எனது அமைச்சு ஊடான புதிய வேலைத்திட்டங்கள் ஜனவரி முதல் ஆரம்பமாகும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலையில்  (11.12.2021) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எதையும் செய்யவில்லை என சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். புதுமையாக நான் எதையாவது செய்வதாக இருந்தால் அரசியல் பழிவாங்கலில் தான் ஈடுபட்டிருக்க வேண்டும். அதை நான் செய்யவில்லை. குறைவாக முழுமைப்பெறாத நிலையில் இருந்த திட்டங்களை முழுமைப்படுத்துவதில் தீவிரம் காட்டினேன்.

நான் அமைச்சு பதவியை ஏற்கும்போது அந்த அமைச்சு 2 ஆயிரத்து 300 மில்லியன் ரூபா கடன் சுமையில் இருந்தது. நல்லாட்சியின்போது 4 ஆயிரம் இந்திய வீட்டுத் திட்டத்தில் 699 வீடுகள்தான் மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தன. நான் அமைச்சு பதவியை ஏற்ற பின்னர்  ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன. எஞ்சியவை இம்மாதத்துக்குள் கையளிக்கப்படும்.

அவர்களால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை நிறுத்தியிருக்க முடியும். அதனை நாம் செய்யவில்லை. எனது அமைச்சின் புதிய வேலைத்திட்டங்கள் அடுத்தவருடம் முதல் ஆரம்பமாகும்.

அதேவேளை,  கூட்டு ஒப்பந்தம் மூலம் நாம் தொழிலாளர்களை பாதுகாத்தோம். ஆனால் அது தொடர்பில் போலி பரப்புரைகளை முன்னெடுத்து எம்மையும் தொழிலாளர்களையும் தூரப்படுத்த முற்பட்டனர். அன்று கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக செயற்பட்ட சங்கங்களும், அரசியல் கட்சிகளும் இன்று சந்தா பணத்துக்காக ஒப்பந்தம் வேண்டும் என்கின்றன. எனவே, சுயநல அரசியலை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கை சனத்தொகையில் 10 வீதமானோர் அரச சேவையில் உள்ளனர். கொரோனா நெருக்கடி நிலையால் இனி ஆட்சேர்ப்பு நடக்குமா என தெரியவில்லை. எனவே, நாம் சுயதொழில் பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சிலர் வேலைதேடியே காலத்தை வீணடிக்கின்றனர். சொந்த முயற்சி மீதும் நம்பிக்கை செலுத்த வேண்டும்.

நாம் அபிவிருத்திகளை செய்தாலும் திறப்புவிழா நடத்தி பிரச்சாரம் செய்யவில்லை. அரசியலைவிடவும் சிறந்த நிர்வாகத்தைதேய நான் விரும்புகின்றேன்.” – என்றார்.