மன்னார் தலைமன்னார் ஏ 14 பிரதான பாதை கல்வெட்டு உடைந்தமையால் போக்குவரத்து ஸ்தம்பிதம்.

( வாஸ் கூஞ்ஞ)

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஓரிரு தினங்களாக பெய்துவரும் கன மழை காரணமாக மன்னார் தலைமன்னாh ஏ 14 பிரதான பாதையில் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டு உடைந்தமையால் இவ் பாதையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனை உடனடியாக சீர் செய்யும் படி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு மன்னார் அரச அதிபரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து தற்காலிகமாக போக்குவரத்து செய்வதற்கான புனரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

கடந்த 26.11.2021 ந் திகதி தொடக்கம் 29 ந் திகதி வரை பெய்து வருகின்ற கன மழை காரணமாக மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் குறிப்பாக மன்னார் தீவு பகுதி பெரும் வெள்ளத்தினால் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளதுடன் வீடுகள,; ஆலயங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் எல்லாம் வெள்ளக்காடுகளாகவே காட்சி அளித்து வருகின்றது.

மக்கள் செறிந்து வாழும் பகுதியான  பேசாலை பகுதியில் 1990ம் ஆண்டுக்கு பிற்பாடு இந்த முறை மிகவும் மோசமான முறையில் இவ் கிராமத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக இவ் வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

பேசாலை கிராமத்தில் கடுமையான மழையிலும் இப்பகுதி இளைஞர்கள் வாய்க்கால்கள் வெட்டி நீரை கடலுக்குள் வெளியேற்றுவதற்கான முயற்சிகளை இரவு இரவாக மேற்கொண்டபோதும் 75 வீதமான மக்கள் தங்கள் வீடுகளில் இருக்க முடியாத நிலையில் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

அத்துடன் கடும் மழையும் வேகமான நீரோட்டத்தால் மன்னார் தலைமன்னார் ஏ 14 பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டு உடைந்தமையால் இவ் வீதி 29.11.2021 அன்று திங்கள் கிழமை போக்குவரத்துக்கு தடைபட்டுள்ளது.

இவ்விடத்துக்கு வருகை தந்த மன்னார் அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல். மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீபன். மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவி பணிப்பாளர் திலீபன் உட்பட வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று நிலமையை பார்வையிட்டதுடன் அரச அதிபரின் வேண்டுகோளைத் தொடர்ந்து உடனடியாக போக்குவரத்துக்கான தற்காலிக நடவடிக்கையை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண்டதுக்கு அமைய தற்பொழுது இதற்கான நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.