(சுமன்)
ஜனநாயகத்தை அழிக்க வேண்டுமாக இருந்தால் முதலில் ஊடகவியலாளர்களை அழித்துவிட வேண்டும் என்று நினைக்கின்றார்களோ தெரியவில்லை. இவ்வாறான கீழ்த்தரமான செயல்களைச் செய்யாமல் அரசு சரியான பாதையில் செல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
வடகிழக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவித்தும், நீதி கோரியும் இன்றையதினம் மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயகத்தின் தூண்களாக இருப்பவர்கள் ஊடகவியலாளர்கள். ஊடகவியலாளர்களைத் தாக்குவது, அழிப்பதென்பது ஜனநாயகத்தை அழிக்கின்ற செயலாகவே இருக்கின்றது. நேற்றைய தினம் மரணித்த உறவுகளை நினைவுகூருகின்ற தினத்தில் முல்லைத்தீவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது முட்கம்பி சுற்றப்பட்ட ஆயுதத்தினால் தாக்குதல் நடத்தியிருக்கின்றார்கள். இது ஊடக சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் விடுக்கப்பட்ட பேரச்சுறுத்தலாகும். இதேபோன்று கிண்ணியாவிலும் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றார்கள்.
இந்த நாடு இராணுவ ஆட்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. சீனாவின் நண்பனாக இருக்கின்ற இலங்கை சீனாவின் பாணியில் ஒரு இராணுவ ஆட்சிமுறையை பின்பற்றுவதற்கு முற்படுவது போன்று தெரிகின்றது.
கடந்த காலத்திலும் பல ஊடகவியலாளர்களை நாங்கள் இழந்து நிற்கின்றோம். அவர்களுக்கான நீதி இன்னும் வழங்கப்படவில்லை. இந்த நாட்டில் நீதி, உரிமை, ஊடக சுதந்திரம் இருக்கின்றதா என்பதை சர்வதேசம் விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றது.
இந்த நேரத்தில் விட்ட தவறுகளையே மீண்டும் மீண்டும் விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நாடு அதளபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. ஜனநாயகத்தை விட்டு வெளியேறி சர்வாதிகாரப் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது.
ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாகவும், தூண்களாகவும் இருக்கும் ஊடகவியலாளர்களைத் தாக்கி அழிப்பதன் மூலமாக இந்த நாட்டின் ஜனநாயகத்தை அழிக்க வேண்டாம் என்று இந்த அரசாங்கத்திடம் உறுதியாகக் கேட்டுக் கொள்கின்றோம். இனியும் இவ்வாறான செயல்கள் நடக்கக் கூடாது.
இவையெல்லாம் ஊடகவியலாளர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்கள். அவர்கள் துணிகரமாகச் சென்று செய்தி சேகரிக்க முடிதளவிற்கு ஸ்தம்பிதம் அடையச் செய்கின்ற செயற்பாடு நடைபெறுகின்றது. ஜனநாயகத்தை அழிக்க வேண்டுமாக இருந்தால் முதலில் ஊடகவியலாளர்களை அழித்துவிட வேண்டும் என்று நினைக்கின்றார்களோ தெரியவில்லை. இவ்வாறான கீழ்த்தரமான செயல்களைச் செய்யாமல் அரசு சரியான பாதையில் செல்ல வேண்டும்.
நல்லாட்சிப் பாதையில் செல்ல வேண்டுமே தவிர இராணுவ ஆட்சிப் பாதையில் செல்லக் கூடாது. இனியும் அடக்குமுறை வேண்டம். ஒடுக்குமுறை வேண்டாம். அவ்வாறு தான் செய்யப் போகின்றீர்கள் என்றால் இது ஜனநாயக நாடு அல்ல இராணுவ ஆட்சிதான் இங்கு நடைபெறப் போகின்றது என்பதைப் பிரகடணப்படுத்திவிட்டு செய்கின்றனவற்றைச் செய்யுங்கள். சர்வதேசம் அதற்குரிய தீர்ப்புகளைத் தரும்.
ஏற்கனவே உள்நாட்டுப்பொறிமுறை செயலிழந்த நிலையில் சர்வதேசப் பொறியில் சிக்கிய இந்த அரசு மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்யக்கூடாது என்பதை எச்சரிக்கையாகவே சொல்லுகின்றோம் என்று தெரிவித்தார்.