முல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்பாட்டங்கள் வெடிப்பு.

(எருவில் துசி) நேற்றைய தினம் முல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய(28) தினம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பனவற்றின் ஏற்பாட்டில் காந்திப் பூங்காவில் அமைந்துள்ள ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபி முன்றலில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

நேற்றைய தினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது இராணுவத்தினாரால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டித்தும், அண்மையில் திருகோணமலை கிண்ணியாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் அதற்கான நீதி கோரியும் மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் மேற்கொள்ளப்படுகின்ற அடக்குமுறைகளை நிறுத்து, தாக்குதலை மேற்கொண்டவர்களை உடனடியாகக் கைது செய், ஊடகவியாளர்களைத் தாக்காதே, ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்காதே போன்ற கோசங்களை எழுப்பியவாறும், ஊடகவியலாளர்களைச் சுதந்திரமாகச் செயற்பட அனுமதி, இராணுவ அடக்குமுறை ஒழிக, அரசே ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்து, சிறைப்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்களை உடன் விடுதலை செய்இ ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய இராணுவத்தினரைக் கைது செய் போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபி முன்றலில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமானது பின்னர் ஊர்வலமாக ஆரம்பித்து மணிக்கோபுரத்தின் ஊடக காந்திப் பூங்கா முன்நுழைவு வாயில் வழியாக காந்தி சிலையருகே சென்று அங்கும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வார்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள், மதகுருமார்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கரணாகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்இ ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், மட்டக்களப்பு மாநகரசபைப் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன், கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜன் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.