ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு அமைய ஒரு இலட்சம் இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்

வி.சுகிர்தகுமார்

  அதிமேதகு ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு அமைய ஒரு இலட்சம் இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக இடம்பெறும் நேர்முகப்பரீட்சை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் தலைமையில் இடம்பெறுகின்ற இந்நேர்முகப்பரீட்சைக்கு 246 இளம் தொழில் முயற்சியாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
காணி முகாமைத்துவ அலுவல்கள் அரச தொழில் முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் சுற்று நிருபங்களுக்கு அமைய அரச காணிகளில் இளம் தொழில் முயற்சியாளர்களுக்கான முதலீட்டு வாய்ப்பினை வழங்கி அதனூடாக அவர்களை ஊக்குவித்து தொழில் துறையில் முன்னேற்றம் செய்யும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இத்திட்டத்தின் ஊடாக காணிக்கான உறுதியொன்றினை பெற்றுக்கொடுத்தல் , காணி அளக்கப்பட்டு வரைபடமொன்றை பெற்றுக்கொடுத்தல் காணிப்பிணக்குகளை தீர்த்துக் கொள்ளல் காணியை ஈடுவைத்து கடன் பெற்றுக்கொடுத்தல்  உற்பத்;தியை மேம்படுத்துவதற்கான பயிற்சி வழங்கல்  உற்பத்திக்காக இயந்திர பொறிமுறைகளை பெற்றுக்கொடுத்தல்  உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் அடிப்படையில் நேர்முகப்பரீட்சைக்காக அழைக்கப்பட்டவர்களில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளும் பயிற்சிகளும் வழங்கப்படுவதுடன் காணி தேவையானவர்களுக்கு உற்பத்தியை அதிகரிக்க தேவையான அரச காணிகளும் வழங்கப்படவுள்ளது