மன்னாரில் மழை வீழ்ச்சியால் பல இடங்கள் வெள்ளக்காடு. மக்கள் இடம்பெயரும் அபாயமும் தோன்றுகின்றது.

( வாஸ் கூஞ்ஞ)

மன்னார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் (23.11.2021) மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதைத் தொடர்ந்து ஏற்கனவே பெய்த மழையின் காரணமாக தாழ்ந்த பிரதேசங்களில் நிலவி வந்த வெள்ள பெருக்கானது இன்னும் சீராகுவதுக்கு முன்னே மீண்டும் பெய்துவரும் மழையினால் வெள்ள பெருக்கு உருவாகி வருகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன் மன்னாரில் பெய்துவந்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கால் சுமார் ஐயாயிரம் ஏக்கர் புழுதி வேள்ளாமை பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்தது.

இவற்றை தற்பொழுது கணிப்பீடு செய்வதற்கான முன்னெடுப்புக்களை அதிகாரிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த இவ்வேளையில் மீண்டும் மழை பெய்து வருவதால் தற்பொழுது மன்னாரில் 31 ஆயிரம் ஏக்கரில் காலபோக விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மேலும் பலர் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது மன்னார் மாவட்டத்தின் பிரதான குளமாகிய கட்டுக்கரைக்குளத்தில் தொடர்ந்து இரண்டு அங்குல நீர் வான் பாய்வதாகவும்

அத்துடன் அகத்திமுறிப்பு குளத்தில் மூன்று அங்குலம் நீர் தற்பொழுது வான் பாய்ந்து வருவதாகவும் மன்னார் மற்றும் வவுனியா நீர்பாசன பணிப்பாளர் எந்திரி யோகராஜா தெரிவித்தார்.

அத்துடன் பல கிராமங்களின் உள்வீதிகள் மற்றும் பலரின் வீடுகளிலும் வீடுகளைச் சுற்றியுள்ள இடங்கள் எல்லாம் வெள்ளக்காடுகளாகவே காட்சி அளிக்கின்றது.

மன்னாரில் இவ் மழை தொடர்ந்து பெய்யுமாகில் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை உருவாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.