அனர்த்தங்கள் ஏற்படும் போது பொதுமக்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படவேண்டும் – அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தெரிவிப்பு

( ஏ.எல்.எம்.ஷினாஸ் , நூருள் ஹுதா உமர், றாஸிக் நபாயிஸ்)

அனர்த்தங்கள் ஏற்படும் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சாய்ந்தமருது, கல்முனை வடக்கு ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று (24.11.2021) கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், சுகாதாரத்துறையினர்,  விவசாயம், நீர்பாசனம், மீன்பிடி, போக்குவரத்து என திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்திற்கு  தலைமை தாங்கி உரையாற்றும் போதே மேலதிக அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்து உரையாற்றும்போது,

இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்றாலும், மனித நடவடிக்கைகளினாலேயே இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. எமது பிரதேசத்தில் பெரியநீலாவணை தொடக்கம் பாணம வரைக்கும் கடலரிப்பு மிக மோசமாக இருக்கிறது. இதனால் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் இரவு நேரங்களில் மணல் அகழ்வது  இடம்பெற்று வருகின்றன. சிலர் சுயநலமாக செயற்படுவதனால், பொது நலம் அல்லது முழு பிரதேசத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது. அதேபோன்று அரச திணைக்களங்கள் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கின்ற பொழுது இயற்கையை இயற்கையாக வைத்துக்கொண்டு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். நீர் வழிந்து ஓடுகின்ற பிரதேசமாக இருந்தால் அவற்றை அடையாளம் கண்டு அதற்கு ஏற்றாற் போல் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதில் அரச அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அனர்த்த நிலைமைகள் ஏற்படுகின்ற பொழுது பொது மக்களை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு நிலையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

தற்போது வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை காணப்படுவதால் அதிக அளவு மழை கிடைக்கிறது. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு மழை நீர் கிடைத்தாலும், ஜனவரி தொடக்கம் நவம்பர் அல்லது ஒக்டோபர் காலப் பகுதியில் குடிநீருக்காக மாவட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து வருகிறோம். இவை தவிர ஏனைய அனைத்து அனர்த்த செயற்பாட்டிற்கும் பல ரூபாய்களை செலவு செய்து வருகின்றோம். பொதுமக்கள் அரசு அதிகாரிகள் நாட்டின் அபிவிருத்திக்கு பங்காளிகளாக செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம். ஏ.சி.எம்.றியாஸ் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஸிக், கல்முனை பொலிஸ் நிலைய சமூக பாதுகாப்பு பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.சி.எம். அல்தாப், இலங்கை நிர்வாக சேவை பயிற்சி உத்தியோகத்தர் நிஹ்மத்துல்லா அய்மன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.