திருமலையில் சேதன விவசாய உற்பத்திப்பொருட் சந்தை ஆரம்பித்து வைப்பு

கதிரவன்
திருகோணமலை மாவட்ட சிறு வியாபார தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சேதன விவசாய உற்பத்திப்பொருட் சந்தை நேற்று திங்கட்கிழமை 2021.11.22மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.
இதனை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள திறந்து வைத்தார்.
மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்கள் முற்றுமுழுதாக சேதனப்பசளையை பயன்படுத்தி உற்பத்தி செய்த உற்பத்திப் பொருட்கள் இங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
தொழில் முயற்சியாளர்கள் தமது  உற்பத்தி பொருட்களுக்கான  அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை பெற்றுள்ளனர்.
சேதன விவசாய உற்பத்தி தொடர்பில் பயிற்சிகளினை நிறைவு செய்த தொழில் முயற்சியாளர்களுக்கு அரசாங்க அதிபரினால் உரிய சான்றிதழ்கள் இங்கு வழங்கி வைக்கப்பட்டது. யப்பான் சமாதான காற்றுPeace Winds Japan நிறுவனம் இதற்கான ஒத்துழைப்பை வழங்கியது.
சேதனப்பசளை மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் தரமானதும் மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததுமாகும். இதில் ஈடுபடுகின்ற உற்பத்தியாளர்களுக்கு கூடிய வருமானம் கிடைக்க கூடியதாக இருக்கும். நுகர்வோரும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள கூடிய சந்தர்ப்பம் இதன்மூலம் ஏற்படுவதாக இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் சேதனப் பசளை மூலம்  விவசாய உற்பத்திகளை மேற்கொள்வதற்கு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே இதன் மூலம் விவசாயிகள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களுக்கு சிறந்த சந்தைவாய்ப்பை பெறுவதுடன் உயர் வருமானத்தையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக அமையும் என்றும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மத்திய வங்கியின்
 பிரதேச முகாமையாளர் பிரபாகரன், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.பிரளாநவன், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
காலை ஆரம்பித்து வைக்கப்பட்ட கண்காட்சியும் விற்பனையும் மதியம் வரை நடைபெற்றது.